எனக்கும், யோகிக்கும் குழந்தைகள் இல்லை.. உங்கள் குழந்தைகளுக்காகவே உழைக்கிறோம்.. உருக்கமாக பேசிய மோடி!
லக்னோ: "எனக்கும், யோகிக்கும் குழந்தைகள் இல்லை, நாட்டு மக்களின் குழந்தைகளுக்காகவே நாங்கள் உழைக்கிறோம்" என உருக்கமாகப் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் இட்டாவா நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, உங்களிடம் ஆசி பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் எனது கடின உழைப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். மக்களுக்காக சேவை செய்வதே எனது தர்மம்.
அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்கான அடித்தளத்தை நான் தயார் செய்து வருகிறேன். சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் தங்களின் எதிர்காலத்திற்காகவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தேர்தலில் போட்டியிடுகின்றன. யோகி ஆதித்யநாத்துக்கும் எனக்கும் குழந்தைகள் இல்லை. எனவே நாங்கள் உங்கள் குழந்தைகளுக்காக உழைக்கிறோம்.
ஒரு கட்சி மெயின்புரி, கன்னோஜ், இட்டாவாவை தங்களது பாரம்பரிய சொத்தாகக் கருதுகிறது. மற்றொரு கட்சி அமேதி, ரேபரேலியை தங்கள் பாரம்பரிய சொத்தாக கருதுகிறது. ஆனால், ஏழைகளுக்கு நல்ல வீடு, கோடிக்கணக்கான பெண்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கழிவறைகள், மின்சாரம், தண்ணீர், இலவச ரேஷன், இலவச சிகிச்சை, குழந்தைகளுக்கு கல்வி இவையெல்லாம் கிடைக்கச் செய்வதே எனது நோக்கம்.
சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தங்கள் குடும்பங்களுக்கும், தங்களது வாக்கு வங்கிகளுக்கும் மட்டுமே நல்லது செய்ய நினைக்கின்றன. அவர்களின் நோக்கங்கள் நல்லவை அல்ல. இப்போது நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் குறித்து பொய்களை பரப்புவதற்கு முயற்சி செய்கிறார்கள்.
கொரோனா காலத்தில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற நம் நாட்டின் விஞ்ஞானிகள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். ஆனால் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதை இழிவுபடுத்தினர். ஆனால் அவர்கள் மட்டும் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர்." என மோடி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications