வரதட்சணை கொடுமை! இளம்பெண்ணின் வாயில் ஆசிட் ஊற்றி கொன்ற கொடூரம்!
லக்னோ: வரதட்சிணை கொடுமையால், ஒரு இளம்பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டம், கலா ஹிடா கிராமத்தைச் சேர்ந்தவர் குல் பைசா. இவருக்கும் அமொர்கா பகுதியைச் சேர்ந்த பர்வேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. குல் பைசா கணவர் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு கூடுதல் வரதட்சிணை கேட்டு பர்வேஷும் அவரது குடும்பத்தினரும் குல் பைசாவை துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, கூடுதல் வரதட்சிணை கேட்டு, பர்வேஷ், அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து குல் பைசாவை தாக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், குல் பைசாவின் வாயில் ஆசிட் ஊற்றி, அதை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
ஆசிட் குடித்ததால் வாய், தொண்டை, குடல் பகுதிகளில் படுகாயமடைந்த குல் பைசாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மொராதாபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 17 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், வரதட்சிணை கொடுமை ஆங்காங்கே தலைதூக்கியுள்ளது. பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கணவன்-மனைவிக்கு, ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. மேலும், அந்தப் பெண் தற்போது கர்ப்பமாக உள்ளார்.
கணவன் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு பானிபூரி உணவகம் நடத்தி வந்துள்ளார். தொழிலை விரிவாக்க, மனைவியின் பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு அவரை துன்புறுத்தியுள்ளார். ஏற்கெனவே திருமணத்திற்கு ரூ. 50 லட்சம் வரதட்சிணையாக கொடுத்த நிலையில், மேலும் ரூ. 10 லட்சத்தை வாங்கி கொடுத்தும் அவருக்கு போதவில்லை. தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு அவர் தொந்தரவு கொடுத்ததால், மனமுடைந்த அந்தப் பெண் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அங்கும் வந்த கணவன், சமாதானப்படுத்தி மனைவியை அழைத்துச் சென்றாலும், மீண்டும் வரதட்சிணை கொடுமை தொடர்ந்ததால், மனமுடைந்த அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு, வரதட்சிணை கொடுமையால் பல பெண்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வரதட்சிணை கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்பதை எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறார்களோ!












Click it and Unblock the Notifications