1997ல் இந்து அமைப்புகள் கொடுத்த நோட்டீஸால் ஏற்பட்ட பிரச்சனை.. திருப்பரங்குன்றம் வழக்கில் அரசு வாதம்!
மதுரை: "திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை இடமற்றம் செய்ய வேண்டும், தர்காவை தகர்க்க வேண்டும் என 1997 ஆம் ஆண்டு சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் துண்டறிக்கை வெளியிட்டனர். இந்த நோட்டீஸால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. மனுதாரர் உள்நோக்கத்துடன் வழக்கை தாக்கல் செய்துள்ளார்." என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், சோலைக்கண்ணன் சார்பில் வழக்கறிஞர்கள் அருண் சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்தனர். மேலும் சில மனுக்களும் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுத்தனர். மேலும் உண்மையிலேயே பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும். தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்துக்கு அருகே தர்கா உள்ளது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என வாதம் வைத்தார்.
மேலும், 74 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. எந்த பிரச்சனையும் இல்லை. 1994-ல் இருந்துதான் பிரச்சனை ஏற்பட்டது. தீபம் ஏற்றுவது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2014-ல் விரிவான தீர்ப்புகள் வந்துள்ளன, 2014 ஆம் ஆண்டு உச்சிப் பிள்ளையார் கோவில் தீபத்தூணில் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா என்று உறுதி செய்து உள்ளீர்களா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், மலை உச்சியில் உள்ளது சர்வே தூண் தான். மலையில், நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானது. மற்றவை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று தெரிவித்தார்.
மேலும், சிக்கந்தர் தர்காவை இடமற்றம் செய்ய வேண்டும், தர்காவை தகர்க்க வேண்டும் என 1997 ஆம் ஆண்டு சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் துண்டறிக்கை வெளியிட்டனர். இந்த நோட்டீஸால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. மனுதாரர் உள்நோக்கத்துடன் வழக்கை தாக்கல் செய்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றவேண்டும் என்ற இந்து முன்னணியின் நோக்கம் தான் மனுதாரரின் மனுவில் உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications