என்ஐடி நியமன தேர்வுகளில் இந்தி கட்டாயமா? கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் எம்பி! வழிக்கு வந்த மத்திய அரசு
மதுரை: என்.ஐ.டி நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து இந்த தேர்வுகளில் இந்தி கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
என்.ஐ.டி மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் ஆசிரியரல்லாத அலுவலர் பணியிட தேர்வுகளில் இந்தி கட்டாயப் பாடம் என்ற உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடந்த 23ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். அதில், "என்.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) 17.08.2023 அன்று வெளியிட்டுள்ளது.

ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்.ஐ டி கள், ஜெய்ப்பூரில் உள்ள எம்.என்.ஐ.டி ஆகிய நிறுவனங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆசிரியரல்லாத அலுவலர் பணி நியமனங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிக்கை அது. அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழித் தேர்வுகளுக்கு தரப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி என மதிப்பெண் விவரம் பிரித்து தரப்படவில்லை.
இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மேலும் இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்புகளை அதிகரித்து இந்தி பேசாத மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும். மேலும் இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்திற்கு எதிரானது.
அலுவல் மொழி விதிகள் 1974, மாநிலங்களை 3 பகுதிகளாக பிரித்து இருப்பதும், தமிழ்நாட்டிற்கு ஒட்டு மொத்தமாக விதி விலக்கு தந்திருப்பதும் கூட தேசிய தேர்வு முகமையால் புறம் தள்ளப்படுவது ஏற்கத்தக்கதல்ல. வன்மையான கண்டனத்திற்குரியது. உடனடியாக தலையிட்டு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள தேர்வு பாட முறையை மாற்றி அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து இந்த தேர்வில் இந்தி மொழி கட்டாயம் இல்லையென்றும், அதற்கு மாற்றாக ஆங்கிலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) வெளியிட்டிருந்தது.
இதில், இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்ததும் 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் தரப்பட்டு இருந்ததும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் தேர்வர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இத்தகைய அநீதி இந்தி அல்லா மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியது, இந்தித் திணிப்பை கைவிட வேண்டுமென்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடந்த 23ம் தேதி கடிதம் எழுதி இருந்தேன். தற்போது கடிதத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது.
அதாவது தேர்வு பற்றிய புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தி கட்டாயம் அல்ல ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதிக் கொள்ளலாம் என்று மாற்றப்பட்டு உள்ளது. இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தி பேசாத அனைத்து மாநில மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
மொழிப் பன்மைத்துவத்தை பாதுகாப்பதிலும், இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்துவதிலும் எப்போதும் முன்னிற்போம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications