மதுரையில் அமித்ஷாவை வரவேற்ற ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு.. எடப்பாடி ஆணைக்கிணங்க வரவேற்றதாக பேட்டி!
மதுரை: மதுரைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மதுரை விமான நிலையத்தில் அதிமுக சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார்.
தமிழ்நாடு பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அமித் ஷாவை வரவேற்ற பாஜக தலைவர்கள்
அவரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பேராசிரியர் ராம.சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதிமுக சார்பில்
அதிமுக தரப்பில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். பின்னர் அமித் ஷா, தனியார் ஹோட்டலில் ஓய்வெடுக்கப் புறப்பட்டுச் சென்றார். இன்று காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார் அமித் ஷா.
இன்று ஆலோசனை
அதைத் தொடர்ந்து, ஹோட்டலுக்கு திரும்பி அங்கு நடக்கும் மையக் குழு கூட்டத்தில் தமிழக பா.ஜ.க.-வின் உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இன்று மாலை பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகத் தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள அமித் ஷா, வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை வழங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க
முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் அமித் ஷாவை வரவேற்க தயாராக இருந்த ஆர்பி உதயகுமார் பேசும்போது, "தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், மதுரை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க வந்துள்ளோம். என்னுடன் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் இணைந்து அ.தி.மு.க சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
அமித்ஷாவின் மதுரை விசிட், தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுக - பாஜக இடையே உள்ள கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக அதிமுக நிர்வாகிகளின் வரவேற்பு அமைந்துள்ளது. இன்றும் அமித் ஷா, சில கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications