தூத்துக்குடியை விடுங்க.. தனுஷ்கோடி என்னாச்சு? மதுரை மெட்ரோ அவ்வளவு தானா? அட்டாக்கை ஆரம்பித்த அதிமுக
மதுரை: மத்திய அரசு அடிக்கல் நாட்டிய ரயில்வே திட்டங்களை கைவிட திமுக அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும், விளம்பர வெளிச்சத்தில் போட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவிப்போடு நிறுத்தி விடுமா? அல்லது செயல் வடிவம் கொடுக்குமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரையில் பேசிய அவர்,” விளம்பர வெளிச்சத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற மக்கள் விரோத திமுக ஆட்சியில், விளம்பர வெளிச்சத்தில் போடுகிற திட்டங்களை எல்லாம் அறிவிப்போடு நிறுத்திவிடுகிறது.

அதை செயல் வடிவம் ஆக்குவது எப்போது என்று மக்கள் கேட்கிறபோது அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, மத்திய அரசுதான் என்று சாக்குப் போக்கு சொல்வதை தொடர்ந்து அவர்கள் மரபாக கடைப்பிடித்து வருவது என்பது தமிழ்நாடு வளர்ச்சிக்கு மிகப் பெரிய கேள்விக்குறி ஆகியுள்ளது.
எடப்பாடு பழனிசாமி சட்டமன்றத்தில் இதை பலமுறை சுட்டிக்காட்டிய பிறகு, அது குறித்து அவர்கள் முழு அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. இன்றைக்கு டங்ஸ்டன் பிரச்சனை எப்படி வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம் தேடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், எடப்பாடியாரின் மிகத் தெளிவாக மத்திய அரசு முயற்சி எடுத்த 10 மாத கால இடைவெளியில் இந்த திமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது. இந்த ரகசியத்தை வெளியிட தயாரா? என்ற கேள்விக்கு இதுவரை முதலமைச்சர் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பதில் சொல்லவில்லை.
நம் உரிமை பறிக்கப்படும் போதெல்லாம், அதற்கு திமுக அரசின் இயலாமையை, கவனக்குறைவை, மக்கள் மீது அக்கறை இல்லாமையை மறைக்க, மத்திய அரசின் மீது பழியை போட்டு அவர்கள் தப்பித்துக் கொள்ளும் போது அதற்கு உரிய விளக்கத்தை மத்திய அரசு தருகிறார்கள். அதே போன்று தான் இன்றைக்கு ரயில்வேயில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி உதவி கிடைக்காத பட்சத்தில், அனுமதி கிடைக்காத பட்சத்தில், மாநிலத் திமுக அரசின் ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தில் அந்த திட்டங்கள் எல்லாம் கிடைப்பில் போடப்பட்டுள்ளது.
மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் ரயில்வே திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய அமைச்சர் அறிவித்தார் என செய்தி வந்த போது, உடனடியாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டார். உடனடியாக அந்தர் பல்டி அடித்தது மத்திய அரசு நாங்கள் இந்த திட்டத்தை சொல்லவில்லை. தனுஷ்கோடி திட்டம் குறித்து தான் மாநில அரசு கடிதம் எழுதி உள்ளது. ஆகவே தனுஷ்கோடி திட்டத்தை தான் நாங்கள் கைவிட போவதாக அறிவித்தோம் என்றது.
ஆக தமிழ்நாட்டுக்கு வளர்ச்சிக்கான திட்டங்களை கிடப்பில் போடுவதற்கு திமுக அரசு கடிதம் எழுதி உள்ளது என்ற உண்மை வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. தூத்துக்குடி திட்டம் என்றாலும் தனுஷ்கோடி திட்டம் என்றாலும் அது தமிழ்நாடு மக்களுக்கு வளர்ச்சிக்கான திட்டம். தனுஷ்கோடி திட்டம் என்பது மக்களுக்கு வரப் பிரசாத திட்டம்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரிலே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒப்புதல் இல்லை என்று கைவிடப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் தேர்தல் காலம் என்பதில் மறுபடியும் அந்தத் திட்டத்தை செயல்படுத்த போகிறோம் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இதை எத்தனை முறை ஆய்வை மேற்கொள்வது எத்தனை முறை ஆய்வு செய்தாலும். அவர்கள் ஏற்கனவே மேற்கொண்ட ஆய்வில் கொடுத்த தகவல் தானே கிடைக்கும்.
வெறும் விளம்பரத்திற்காக திட்டங்களை அறிக்கையாக விடாமல் திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு செய்ய முன் வருமா? இந்த மெட்ரோ ரயில்வே திட்டம் நிலுவையில் இருக்குமா, செயல்படுத்தப்படுமா? இது மக்களுக்கு பயன் பெறும் திட்டமா? இல்லை மக்களை ஏமாற்று திட்டமா என்பதை திமுக அரசு கூறவேண்டும் என கூறினார்












Click it and Unblock the Notifications