"எல்லாம் ஓவர்.." எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு எடப்பாடி.. ஆர்பி உதயகுமார் ஆரவாரம்
மதுரை: முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இனி எடப்பாடி பழனிசாமி வழியில் அதிமுக பயணிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தாா்.
இதனைத்தொடர்ந்து தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

ஆர்பி உதயகுமார் பேட்டி
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இபிஎஸ் வழியில் முன்னோக்கி செல்ல அதிமுக தொண்டர்கள் தயாராக உள்ளனர். இபிஎஸ் நடத்திய சத்திய சோதனையில் கிடைத்துள்ள வெற்றி, தொண்டர்களுக்காக கிடைத்த வெற்றியாகும்.

உள்ளங்கை நெல்லிக்கனி
சென்னை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் என அனைவரும் இபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு மூலம் அந்த ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மறைமுக விமர்சனம்
தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொள்ளும் போது தொண்டர்கள், மக்களின் ஆதரவை பார்த்திருப்போம். அனைத்து நிர்வாகிகளும் இபிஎஸ்-க்கு ஆதரவளித்து பணியாற்றி வருகிறார்கள். ஆனால் தெரியாதது போல், புரியாதது போல் சிலர் இருக்கிறார்கள். அவர்களை எப்போதும் எதும் செய்ய முடியாது.

இபிஎஸ் வழியில் அதிமுக
ஓபிஎஸ் நீக்கப்பட்டது பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. அதனை நீதிமன்றத் தீர்ப்பு அங்கீகரித்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி வழியில் தான் அதிமுக பயணிக்கும். இதுதான் அதிமுகவின் எதிர்காலமாக இருக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications