சர்க்கரை அட்டைதாரர்கள் கவனத்திற்கு! மே 30 விதிகள் பின்பற்றவில்லை என்றால் கார்டு முடக்கம் வாய்ப்பு?
சென்னை: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் பலரும் சலுகை விலையில் தரும் மளிகை பொருட்களை உபயோகித்து வருகிறார்கள்.. ஆனால், ரேஷனில் பொருட்கள் வாங்காமல் விட்டால், அதனால் என்ன நடக்கும்? பச்சை, வெள்ளை, சர்க்கரை அட்டைகளில் நிறங்கள் ஏன் இத்தனை உள்ளன? இதன் அர்த்தம் என்ன என்பதையும் சிலர் அறிவதில்லை.. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள மூன்று முக்கிய குடும்ப அட்டைகளில், முதலாவதாக உள்ள பச்சை நிற அட்டை அல்லது ரைஸ் கார்டு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச அரிசி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களைப் பெற வழங்கப்படுகிறது.

வெள்ளை நிற கார்டு
இரண்டாவதாக, சர்க்கரை கார்டு என்று அழைக்கப்படும் வெள்ளை நிற அட்டை நடுத்தரக் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது; இதில் அரிசி பெற முடியாது என்றாலும், கூடுதல் அளவில் சர்க்கரை வாங்கும் வசதி உள்ளது..
மூன்றாவதாக, ரேஷன் கடைகளில் எந்தவொரு பொருளையும் வாங்க முடியாத 'பொருட்கள் இல்லா அட்டை' உள்ளது; இது அரசு ஊழியர்கள் அல்லது அதிக வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு அடையாள ஆவணமாக மட்டுமே பயன்படுத்த வழங்கப்படுகிறது..
பயனாளிகள் - ரேஷன் அட்டைகள்
இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கார்டுகளை முகவரிச் சான்றாகப் பயன்படுத்தும் சில பயனாளிகள், மாதந்தோறும் பொருட்களை பெறாததால் தங்களின் கார்டுகளை முடக்குவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை எச்சரித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில், கடந்த சில மாதங்களாகப் பொருட்கள் வாங்காத கார்டுதாரர்களின் விவரங்களைப் பட்டியலிடும் பணி, e-POS இயந்திரங்கள் மூலம் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. இதற்கான கள ஆய்வுகள் மே 30-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது..
கைரேகை பதிவு கட்டாயம்
இது குறித்து நியாயவிலைக் கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு மாதமும் பொருட்கள் விநியோகம் செய்யும்போது கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் பெறப்படும் தரவுகள் அனைத்தும் மாநில உணவுப் பொருள் வழங்கல் துறையின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படுகிறது.. தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் கடைக்கு வராத குடும்ப அட்டைகள், பயன்பாட்டில் இல்லாதவை என்ற அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன" என்று கள நிலவரத்தைத் தெரிவித்தார்..
இந்த அட்டைகளை முகவரிச் சான்றாக மட்டும் வைத்திருப்பவர்கள், பொருட்களை வாங்காதபோது, அந்த முகவரியில் அக்குடும்பம் தற்போது வசிக்கிறதா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுகிறது.. இதன் அடிப்படையில், வட்ட வழங்கல் அலுவலர்கள் அந்த முகவரிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.. அங்கு அவர்கள் இல்லை என்று தெரியவந்தால், அந்த அட்டைகள் தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக கள ஆய்வில் தெரியவந்துள்ளது..
பொருட்கள் இல்லா அட்டை
உணவுப் பொருள் வழங்கல் துறையின் இந்த அதிரடி ஆய்வு நடவடிக்கையால், பண்டிகைக் காலங்களில் அரசு வழங்கும் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு அல்லது அவசர கால நிவாரண நிதிகளைப் பெறுவதில் பல நடுத்தரக் குடும்பங்கள் சிக்கலைச் சந்திக்கக்கூடும்.
குறிப்பாக, சொந்த ஊருக்கு இடம் பெயர்ந்த பிறகும், அதே முகவரியில் ரேஷன் அட்டையை வைத்திருப்பவர்கள் மற்றும் கார்டுகளை முறையாகப் புதுப்பிக்காதவர்களின் நிலையும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. பொருட்கள் தேவைப்படாத கார்டுதாரர்கள் தங்களின் அட்டையைத் தானாகவே முன்வந்து "பொருட்கள் இல்லா அட்டை"யாக மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது..
அரசு மானிய விலையில் வழங்கப்படக்கூடிய பொருட்கள் உரியவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டாலும், முறையான கள ஆய்வுகளுக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கிறது.. இதனால், கார்டு செயல்பாடு தொடர்பான கவனம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..












Click it and Unblock the Notifications