மனைவியின் கள்ளத்தொடர்புக்கு ஆதாரம் கிடைப்பது கடினம்! CRPF வீரருக்கு விவாகரத்து வழங்கிய ஹைகோர்ட்
சென்னை: மனைவி கள்ளத்தொடர்பில் இருப்பதாக கூறி விவாகரத்து கோரிய வழக்கில் சிஆர்பிஎப் வீரருக்கு குடும்ப நல நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து மேல்முறையீடு செய்த சிஆர்பிஎஃப் வீரருக்கு அவரது மனைவியிடம் இருந்து உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இந்த வேளையில் கள்ளத்தொடர்பு ஒரு ரகசியமான உறவு என்பதால் அதற்கு நேரடி ஆதாரம் பெறுவது கடினம். அதேவேளையில் மற்றொரு நபருடன் மனைவிக்கு நெருக்கம் இருந்ததற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்(சிஆர்பிஎஃப்) பணியாற்றி வருகிறார். இவர் வெளிமாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த 2011ம் ஆண்டில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த சிறிது நாளில் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு சிஆர்பிஎஃப் வீரர் வேலைக்கு சென்றார். இவர் ஆண்டுக்கு 2 முறை மட்டுமே வீட்டுக்கு வருவார்.
கள்ளக்காதல்
இந்த சமயத்தில் கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே தான் அந்த பெண்ணின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும், இன்னொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த சிஆர்பிஎஃப் வீரர் உடைந்து போனார். அதோடு தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதுதொடர்பாக விழுப்புரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
மனுவில், ''தனது மனைவிக்கு, இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளது. இதனால் விவாகரத்து வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது. அதோடு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
குடும்பநல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிஆர்பிஎஃப் வீரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவி கார்த்திகேயன், கே ராஜசேகர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது தனது மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் நபருடன் நெருக்கமாக இருக்கம் போட்டோவை வழங்கினார். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர், கிராமத்தை சேர்ந்த சிலர் சாட்சியம் வழங்கினர்.
விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்
வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த சமயத்தில், ''பாலியல் ரீதியிலான தொடர்பு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே திருமணத்தை ரத்து செய்ய முடியும். ஆனாலும் இத்தகைய வழக்குகளில் நேரடி ஆதாரம் பெறுவது கடினம். அதோடு சாத்தியமற்றது. ஏனென்றால் கள்ளத்தொடர்பு என்பது மிகவும் ரகசியமான செயல். இதனால் கள்ளள உறவுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், மற்றொரு நபருடன் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன'' என நீதிமன்றம் கூறி விவாகரத்து வழங்கியது.












Click it and Unblock the Notifications