திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயிலுக்குள் ஆச்சரியம்.. அதென்ன சிவப்பு கலர்ல? கந்தா, முருகா, ஷண்முகா
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்த செய்திதான் இணையத்திலும் பரவி கொண்டிருக்கிறது.
பொதுவாக, நிம்மதியை தேடி கோயிலுக்கு பக்தர்கள் செல்வார்கள்... அல்லது தங்கள் வேண்டுதலுக்காக கோயிலுக்கு செல்வார்கள்.. அல்லது பக்தி காரணமாக கோயிலுக்கு செல்வார்கள்.

அப்படி பக்தர்கள், கோயிலுக்கு செல்லும்போதெல்லாம் தங்களுடைய வேண்டுதல்களையும் கடவுளிடம் மனமுருகி பிரார்த்தித்து சொல்வார்கள். ஆனால், சமீபகாலமாகவே, வித்தியாசமான பிரார்த்தனைகளை தமிழகத்தின் கோயில்களில் காண முடிகிறது..
பக்தர்கள்: சில நாட்களுக்கு முன்பு, தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணியர் கோயிலில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்தது.. ஒரு ஆசாமி கோயிலுக்குள் நுழைந்து மனமுருகி பிரார்த்தனை செய்துள்ளார்.. பிறகு, ஒரு பேப்பரில்., தனக்கிருக்கும் 1 கோடி ரூபாய் கடன் பிரச்சனையை, விலாவரியாக அதில் எழுதினார்.
அதாவது, யார் யாரிடம் கடன் வாங்கினார்? ஒவ்வொருவரிடமும் எவ்வளவு கடன் வாங்கினார்? மொத்தம் கடன் தொகை எவ்வளவு இருக்கிறது? யாருக்கு எவ்வளவு கடன்பாக்கி தர வேண்டியிருக்கிறது? போன்ற விவரங்களை வரிசையாக எழுதினார்..
கடன் பாக்கி: "முருகா, எனக்கு 1 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் பாக்கி இருக்கிறது.. இந்த கடனை மற்றவர்களுக்கு தர வேண்டியிருக்கிறது. இவ்வளவு கடனை எப்படி அடைக்க போகிறேனோ தெரியவில்லை, சிலரிடமிருந்து ரூ.10 கோடியே 10 லட்சம் எனக்கு வர வேண்டியிருக்கிறது.. அந்த பணம் எனக்கு சீக்கிரமாக வந்து சேர வேண்டும்" என்று எழுதியிருந்தார்..
அத்துடன், காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க, தாக்க தாக்க தடைகள் நீங்க, பார்க்க பார்க்க பாவம் பொடிபட என்று வரிகளுடன்.. முருகா முருகா ஓம் முருகா, கடன் அடைய வேண்டும் முருகா என்று எழுதி முடித்திருந்தார். இந்த பேப்பரை கோயில் உண்டியலிலும் போட்டுவிட்டு சென்றுள்ளார்..
யாரந்த ஆசாமி: இவ்வளவு விலாவரியாக கடன் பிரச்சனையை சொன்னவர், தன்னுடைய பெயர்? ஊர், முகவரி என எதையுமே சொல்லவில்லை. எனவே, அவர் யார் என்றும் தெரியவில்லை.. கோயில் உண்டியலை எண்ணுவதற்காக கொட்டிப்பார்த்தபோதுதான், அதிகாரிகளின் கண்ணில் இந்த பேப்பர் தென்பட்டது.. இந்த கடிதம் சோஷியல் மீடியாவிலும் வைரலாகியிருந்தது.

இதோ, மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிலும் அப்படித்தான், உண்டியலை எண்ணும் பணி நடந்துள்ளது.. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல் என்னும் பணி நடைபெறும் என்பதால், நேற்றைய தினமும் கோயிலிலுள்ள 40 உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன..
காணிக்கைகள்: இதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் நோட்டுகள், காசுகள், தங்கம், வெள்ளி போன்றவை எண்ணப்பட்டன. இவைகளுக்கு நடுவே 3 சிறிய பேப்பர்களும் கிடைத்தன. அதில், ஒரு பேப்பரில், "ஓம் கந்தா.. கடம்பா இன்று எனக்கு ரூ 20,000 வேண்டும்.. விரைவாக தருக.." என்று சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்தது.
2வது பேப்பரில், "ஓம் முருகா துணை.. இன்று எனக்கு ரூ 30,000 வேண்டும்.. விரைவாக தருக.. ஜிஜி ரன்.." என சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்தது.. 3வது பேப்பரில் "ஓம் சண்முகா.. வெற்றி வேலா.. எனக்கு ரூ 6,00,000 லட்சம் விரைவாக வேண்டும்.. கந்தா கடம்பா கார்த்திகேயா.. எனக்கு 6,00,000 லட்சத்தை ஏதாவது ஒரு வகையில் தருக தருக.. நன்றி இப்படிக்கு ஜிஜி ரன்.." என்று எழுதப்பட்டிருந்தது. இந்த 3 பேப்பர்களிலும் எழுதியது ஒரே நபராக இருக்கலாம் என்கிறார்கள்.
திடீர் உயர்வு: எதற்காக இந்த ஆசாமி 3 பேப்பர்களிலும் எழுதி போட்டார்? என்றுதெரியவில்லை.. முதலில், முருகனிடம் 20 ஆயிரம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.. பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ரூ.30 ஆயிரம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு பிறகு, ஒரேடியாக 6 லட்சத்துக்கு எகிறிவிட்டார்..
இந்த "ஜிஜி ரன்"-னுக்கு கந்தனின் கருணை எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.. ஆனால், இந்த 3 சிவப்பு மை லெட்டரும் இணையத்தில் "பயபக்தியுடன்" வலம்வந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications