மதுரை மீனாட்சி அம்மனை கும்பிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா.. பக்தர்களுக்கு கோவிலில் தடை!
மதுரை: மதுரை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். இதனால், பக்தர்களுக்கு கோவிலில் தடை விதிக்கப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்வது, கட்சியை வலுப்படுத்துவது, தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில் அண்மையில் திமுக மதுரையில் பொதுக்குழுவை கூட்டியது.

இந்நிலையில் மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று இரவு தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் வரவேற்றனர்.
சிந்தாமணியில் தங்கிய அமித் ஷா
பாஜக முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்ற நிலையில், சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி அவர் ஓய்வெடுத்தார். அமித்ஷா வருகையை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அத்துடன் மதுரையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலில் அமித் ஷா
இதனையடுத்து இன்று காலை 11 மணிக்கு மேல், ஹோட்டலில் இருந்து புறப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார் அமித் ஷா. மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். கோவிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனையொட்டி கோயில் வளாகத்தை சுற்றி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அமித் ஷா வருகையை ஒட்டி, ஒரு மணி நேரம் கோவிலில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குக் கோபுரம் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. கோயிலின் அனைத்து கோபுர வாயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.
இன்று முக்கிய ஆலோசனை
பின்னர் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பும் அமித் ஷா, அங்கு முக்கிய பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சட்டப்பேரவை தேர்தல் வியூகம், பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள் எவை என்பது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதிக்க உள்ளார். பின்னர் 3 மணியளவில் மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
முன்னதாக மதுரை ரிங் ரோடு சிந்தாமணி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அமித் ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை சந்தித்து பேசினார் அமித் ஷா.












Click it and Unblock the Notifications