பூரித்துப்போன எடப்பாடி பழனிச்சாமி.. மதுரையில் தொண்டர் சொன்ன வார்த்தை.. முகமெல்லாம் புன்னகை
மதுரை: திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை சென்றார். அப்போது மதுரை விமான நிலையத்தில் அவரை பார்த்து அதிமுக தொண்டர் சொன்ன வார்த்தையால் எடப்பாடி பழனிச்சாமி பூரித்துப்போனார்.
தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் மாநிலம் முழுவதும் அவர் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

ஆனாலும் கூட தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு தோல்வியில் இருந்து மீண்டு வருவது பற்றி விவாதித்துள்ளார்.
இதற்கிடையே தான் இன்று அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் இல்ல திருமண விழா மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
முன்னதாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமி மதுரை சென்றார். மதுரை விமான நிலையத்தில் இறங்கிய எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த வேளையில் அங்கிருந்த தொண்டர், ‛‛அய்யா கவலைப்படாதீங்க.. 26ல் நம்மதான்.. ஆமா'' என்று கூறினார். அதாவது 2026ம் ஆண்டு தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பதை தான் அந்த தொண்டர் இப்படி கூறினார். இதனை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி பூரித்துப்போனார். அவரது முகமெல்லாம் புன்னகையாக மாறியது.
தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி, சட்டசபை தேர்தல், நகர்புற உள்ளாட்சி, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் என்று அடுத்தடுத்து அதிமுக தோல்வியை தழுவி வரும் நிலையில் அதிமுக தொண்டர் இப்படி கூறினார். தொடர் தோல்வியடைந்தாலும் 2026ல் அதிமுக வெல்லும் எனக்கூறி எடப்பாடி பழனிச்சாமியை அந்த தொண்டர் உற்சாகப்படுத்தினார்.
இந்த வேளையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் ஜுலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக நேற்று அறிவித்தது. இதுபற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛அதிமுக எழுச்சியோடு வலிமையோடு உள்ளதை இந்நேரத்தில் சுட்டி காட்டுகிறேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நடந்தவை உங்களுக்கு தெரியும்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெற்றது, வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல் அடைத்து வைத்து திமுக கொடுமைப்படுத்தியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மாநில அரசுக்கு துணை போனது இடைத்தேர்தலில் அமைச்சர்கள் முகாமிட்டு ஆட்சி அதிகாரம் பண பலத்தை பயன்படுத்தி அதிகமான பரிசு பொருள் கொடுத்து தேர்தலில் தில்லுமுல்லு செய்தனர்.
ஈரோடு கிழக்கு போலவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என்பதால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு 6000 வாக்குகள் குறைவாகத்தான் கிடைத்தது, விக்கிரவாண்டி எடுக்குறதுக்கு திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை வாரி இரைப்பார்கள்.
பூத் வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பணத்தை கொடுப்பார்கள், விக்கிரவாண்டியில் ஜனநாயக படுகொலை நடைபெறும்.
சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது. ஆகவேதான் விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு வேறு எந்த காரணமும் இல்லை'' எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications