மதுரை வெங்காய தோசை ''பகுத் அச்சா''! சப்பு கொட்டி சாப்பிட்ட பாஜக தேசிய பொதுச்செயலாளர்! எளிய விருந்து!
மதுரை: பாஜக தேசிய பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான துஷ்யந்த் குமார் கவுதமுக்கு, மதுரை வெங்காய தோசையின் சுவை பிடித்துப் போக அதனை ஒரு பிடி பிடித்துள்ளார்.
மதுரை வந்த துஷ்யந்த்குமார் கவுதமிற்கு பிரபல ஹோட்டல் ஒன்றில், மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதனை வேண்டாம் எனக் கூறிவிட்டு பாஜக கிளை நிர்வாகி வீட்டில் நேற்றிரவு உணவு சாப்பிட்டுள்ளார்.
மேலும், மதுரையின் பேமஸ் உணவுகளான அயிரை மீன் குழம்பு, கோனார் கடை கறிதோசை உள்ளிட்ட உணவுகளையும் சுவைத்துப் பார்க்குமாறு துஷ்யந்த்குமார் கவுதமிடம் பாஜக நிர்வாகிகள் எடுத்துக் கூற, செவ்வாய்கிழமை என்பதால் நான் வெஜ் வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

அமித்ஷா நண்பர்
பாஜக தேசிய பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான துஷ்யந்த்குமார் கவுதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். அதனால் தான் இவர் உத்தரகாண்ட், பஞ்சாப், சண்டிகர், உள்ளிட்ட 4 மாநில மேலிட பொறுப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டி மதுரை வந்த அவர், மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

டாக்டர் சரவணன்
அமித்ஷாவின் நண்பரான துஷ்யந்த் குமாருக்கு மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் உற்சாக வரவேற்பு அளித்ததோடு அவருக்கு மதுரையின் பேமஸ் உணவு வகைகளை இரவு விருந்துக்காக ஏற்பாடு செய்திருந்திருக்கிறார். கோனார் கடை கறிதோசை, அயிரை மீன் குழம்பு, விரால் மீன் வறுவல் என டாக்டர் சரவணன் ஒரு புறம் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வைக்க, பாஜக கிளை நிர்வாகி வீட்டில் இரவு உணவு சாப்பிடுவோம் என துஷ்யந்த் குமார் கூறியிருக்கிறார்.

வெங்காய தோசை
இதையடுத்து மீனாட்சியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள கிளை நிர்வாகி ஒருவரது வீட்டில் இட்லி, தோசை, என இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார் சரவணன். அங்கு வெங்காய தோசை சாப்பிட்ட பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த்குமாருக்கு அது ரொம்பவே பிடித்துப் போனதாம். காரணம் மண் மணக்கும் மதுரையின் சட்னி வகைகள் தானாம். தேங்காய் சட்னி, காரசட்னி, மல்லி சட்னி என எல்லா வகை சட்னிகளையும் ருசி பார்த்திருக்கிறார் அவர்.

நான் வெஜ்
மதுரையில் உள்ள அசைவ மெஸ்களை பற்றியும் அவற்றில் உள்ள சிறப்பு உணவுகள் பற்றியும் பாஜக நிர்வாகிகள் சிலர் எடுத்துக் கூற, செவ்வாய்கிழமை என்பதால் அதைப்பற்றியே பேச்சே வேண்டாம் என தவிர்த்திருக்கிறார் துஷ்யந்த் குமார் கவுதம். இதனிடையே மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருச்செந்தூர் புறப்படுவதற்கு முன்பு, மதுரைக்காரர்களின் பாசம் மறக்கமுடியாதது எனக் கூறி டாக்டர் சரவணன் பாராட்டிச் சென்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications