தனி விமானம் மூலம் மதுரை வரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா.. என்னென்ன பிளான்!
மதுரை: மதுரையில் பிரசாரத்தை தொடங்குவதற்காக இன்று இரவு அவர் தனி விமானம் மூலம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மதுரை வருகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட தொடங்கிவிட்டன.

அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இன்னும் சில கட்சிகள் தொடங்க போகின்றன.
இந்நிலையல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் தேர்தல் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரையில் இருந்து நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதற்காக இன்று இரவு அவர் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.
பின்னர் அங்குள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை (30ந்தேதி) காலை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஜே.பி. நட்டா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஜே.பி. நட்டா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். மதியம் தமிழக பா.ஜ.க.மையக் குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடுகிறார்.
அப்போது சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. அதன்பின்னர் பா.ஜ.க.வில் இணைந்த மற்ற கட்சி நிர்வாகிகளுடன் அவர் மதிய விருந்தில் பங்கேற்கிறார்.பின்னர் மாலையில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து மதுரை ரீங்ரோடு அம்மா திடலில் நடக்கும் பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். நாளை இரவு மதுரையில் தங்கும் ஜே.பி.நட்டா அடுத்த நாள் (31ந்தேதி) புதுச்சேரி செல்கிறார். ஜேபி நட்டா வருகையையொட்டி அவர் தங்கும் விடுதி மற்றும் செல்லும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications