அருணாச்சலப் பிரதேசத்தில் மரணமடைந்த ராணுவ வீரர் உடல் மதுரையில் தகனம் - 21 குண்டுகள் முழங்க மரியாதை
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏ மரணமடைந்த ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க மதுரை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மதுரை: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் கதிர்வேலின் உடல் சொந்த ஊரான மதுரையில் 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி என்பவரின் மகன் கதிர்வேல்,36. ராணுவவீரரான இவருக்கு திருமணமாகி சண்முகப்பிரியா, 25 என்ற மனைவியும், ஹனிஸ்க்,7, பார்த்திவ், 3,ஆகிய குழந்தைகள் உள்ளனர் .

கதிர்வேல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அருணாசலபிரதேசத்தில் மழை வெள்ள மீட்புப் பணியில் இருந்தபோது, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தார். ராணுவ அதிகாரிகள் அவரது உடலை மீட்டு அசாம் ராணுவ தலைமையகத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வழியாக மதுரைக்கு சனிக்கிழமை இரவு கதிர்வேலின் உடல் கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு ஆட்சியர் அனீஷ்சேகர், காவல் துணை ஆணையர் தங்கதுரை, காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் வில்லாபுரத்திலுள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திருச்சி பிராந்திய ராணுவ மையத்தில் இருந்து கேப்டன் குல்தீப் ராணா தலைமையில் 22 ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் மதுரை கீரைத்துறை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications