'ஹைகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ்' மதுரை வந்த சந்திரசூட்.. மு.க.ஸ்டாலின் வைத்த 3 கோரிக்கைகள்!
மதுரை: உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை வைத்துள்ளார். அதேபோல் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரையில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு, உச்சநீதிமன்றம தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.

முக ஸ்டாலின் பேச்சு
மேலும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், உச்சநீதிமன்றம தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின், முதல்முறையாக தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் சந்திரசூட்டை வருக வருக என்று வரவேற்கிறேன். பாண்டிய மன்னனை எதிர்த்து கண்ணகி நீதியை கேட்ட இடமான மதுரை மண்ணிற்கு வரவேற்கிறேன்.

தமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு
பொதுமக்களுக்கு சேவையாற்றுவதே முன்னுரிமை என்று சொல்லி பதவியேற்ற சந்திரசூட், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாடு மக்கள் மீதும் தங்களுக்கு தனிப்பாசம் உண்டு. கொரோனா பரவலின் 2ஆம் அலையின் போது, தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பையும் பாராட்டி இருந்தார். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
இந்த விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டர் கருணாநிதி தான். 1973ஆம் ஆண்டு முதல் முயற்சி செய்து 2000ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையில் அடிக்கல் நாட்டி தென் மாவட்ட மக்களின் கனவை நனவாக்கினார். கருணாநிதி முயற்சியால் உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது.

44 புதிய நீதிமன்றங்கள்
நீதி நிர்வாகம் சுதந்திரமாக செயல்பட ஏதுவாகவும், மக்களுக்கு விரைந்து நீதி வழங்கும் வகையிலும், நீதிமன்றங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம் என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை புதிய நீதிமன்றங்கள் அமைக்க தேவையான நீதிபதிகள், அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி ரூ.106 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 44 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முக ஸ்டாலின் வைத்த மூன்று கோரிக்கை
அதேபோல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு மூன்று கோரிக்கைகள் வைக்கிறேன். அது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், உச்சநீதிமன்றக் கிளையை சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை சந்திரசூட் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இதுகுறித்து ஏற்கனவே மத்திய அரசுக்கு எழுதியுள்ளோம். இதனை நீதித்துறையும், மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications