அதிமுக கூட்டத்தில் அடிதடி.. முன்னாள் அமைச்சர்கள் முன்னிலேயே நடந்த திகில் சம்பவம்.. பரபரத்த மதுரை!
மதுரை: நெல்லை மற்றும் கும்பகோணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் இரு கோஷ்டியினர் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மதுரையில் நடந்த அதிமுக ஆய்வு குழு கூட்டத்திலும் இரு பிரிவினருக்கிடையே அடிதடி ஏற்பட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் கட்சி அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது தொடர்பாக கருத்துகளை வழங்க கள ஆய்வுக் குழுவை அமைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய இந்தக் குழுவினர், மாவட்டம் தோறும் சென்று கட்சிப் பணிகள் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் இன்று அதிமுக கள ஆய்வுக்கு கூட்டம் நடைபெற்றது. மதுரையில் இன்று அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மதுரையில் உள்ள மத்திய தொகுதி, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு என நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டு அடிதடி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை, செல்லூர் ராஜூ ஆகியோரின் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பு அதிமுக நிர்வாகிகளை மற்றொரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“எடப்பாடியாருக்கு ஒரு “ஓ” போடலாமா?" மதுரையில் அதிமுகவினரை உற்சாகப்படுத்திய செல்லூர் ராஜு!
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, அமைச்சர் செம்மலை ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கும் போது, மேடைக்கு வந்த அதிமுக நிர்வாகி ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பகுதிக் கழக நிர்வாகிகளை விசாரிப்பது போல மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூவையும் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அவரை சமாதானம் செய்ய வந்த அதிமுக நிர்வாகிகளுடன் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை தள்ளி விட்டதால் கள ஆய்வு கூட்ட மேடையிலேயே கைகலப்பு ஏற்பட்டது. செல்லூர் ராஜூ அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டும், அதனை கண்டுகொள்ளாமல் கைகலப்பில் ஈடுபட்டனர்.
கடும் சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தரப்பினரும் டாக்டர் சரவணன் ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். செல்லூர் ராஜூ - டாக்டர் சரவணன் இடையே பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இரு தரப்பும் தங்கள் கையே மதுரை அதிமுகவில் ஓங்கி இருக்க வேண்டும் என நினைப்பதால் மோதல் நடந்து வருவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, நெல்லை, கும்பகோணத்தில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டங்களின்போது, அதிமுகவினர் இடையே மோதல் வெடித்த நிலையில், மதுரையில் தற்போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அடிதடி நிகழ்வு தொடர்பாக பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர், “எந்த மோதலும் இல்லை. அதிமுகவில் பிரச்சனை இருப்பது போல பூதாகரமாக்க முயல்கின்றனர். அதிமுகவில் சலசலப்பு இல்லை. கட்சியினரிடம் பணி புரிவதில் போட்டி உள்ளது, அவ்வளவு தான். கட்சியினர் பேசுவதற்கு அனுமதி கேட்டனர்; அதை தருவதாக சொன்னோம். பிரச்சனை முடிந்து விட்டது. அதற்குள் சிலர் எழுப்பிய சத்தத்தை பெரிதாக்கி விட்டனர்” எனத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications