“எடப்பாடியாருக்கு ஒரு “ஓ” போடலாமா?" மதுரையில் அதிமுகவினரை உற்சாகப்படுத்திய செல்லூர் ராஜு!
மதுரை: “எடப்பாடியாருக்கு ஒரு ஓ போடலாமா?" என மதுரையில் இன்று நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
2026 சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய இந்தக் குழுவினர், மாவட்டம் தோறும் சென்று கட்சிப் பணிகள் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் குழுவில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ,செம்மலை, அ.அருணாச்சலம், பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கள ஆய்வுக் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் முன்னிலையில் மதுரையில் இன்று கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுக ஆட்சியை மீண்டும் அமைப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் கள ஆய்வுக் குழுக்களை அமைத்து அனுப்பி இருக்கும் புரட்சித் தமிழர் எடப்பாடியாருக்கு நாம் எல்லோரும் “ஓ” போடலாமா?” எனக் கேட்டார். உடனே, அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக “ஓ” என ஆரவாரம் செய்தனர்.
மேலும் பேசிய செல்லூர் ராஜூ, “மதுரை என்றால் சும்மா தூள் கிளப்ப வேண்டும். மதுரையில் நிர்வாகிகளின் உற்சாகத்தைப் பற்றி கள ஆய்வுக் குழுவினர் எடப்பாடியாருக்கு சொல்ல வேண்டும்.” எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications