16 மணி நேரம்! 20 இடங்களில் நடந்த ரெய்டு ஓவர்! எ.வ.வேலு வீட்டில் ரூ 40 லட்சம் பறிமுதல்?
சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 16 மணி நேரமாக நடத்தப்பட்ட ரெய்டு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து 40 லட்சம் பணம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சியில் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது. அதன் பேரில் நேற்றைய தினம் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டை வீடு, திருவண்ணாமலை இல்லம், அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரது காரில் கூட சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 16 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனை குறித்து எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ரெண்டு நாளைக்கு முன்னால, தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், ஆளுநர் உரைக்கு பதிலுரை கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திட்டமிட்டு, '2017-ல இருந்து 2021 வரை' என்று ஒரு குறிப்பிட்ட ஆண்டை சொல்லி, ஆதாரம் இல்லாத ஒரு குற்றச்சாட்டை சொன்னார் அவர்.
அப்பொழுது நான் இருந்து, 'ஆதாரத்தோடு பேசுங்கள், அப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்று சொன்னால், பேரவைத் தலைவரிடத்திலே ஆதாரத்தைக் காட்டிவிட்டுதான் சொல்வதுதான் இதுவரைக்கும் மரபு' என்று சொன்னேன்.
அதற்குப் பின்னால் எங்களுடைய எதிர்க்கட்சியினுடைய தலைவர் இருந்து, 'எனக்கு மைக் கொடுங்கள்' என்று சொன்னார். நான் பேரவைத் தலைவரைப் பார்த்து, 'என்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சருக்கு பதில் சொல்ல வேண்டும், எனவே அவருக்கு மைக் கொடுங்கள்' என்று தொடர்ந்து வலியுறுத்தி நின்று கொண்டிருந்தேன்.
'ஆதாரத்தைக் காட்டிட்டு முதலமைச்சரைப் பேசச் சொல்லுங்க'ன்னும் தொடர்ந்து அவர்கள் அனுமதிக்கலை. அதற்குப் பின்னால் அவர் எங்களை 'வெளிய தூக்கிப் போடலாம்'ன்ற ஒரு நிலைக்கு போய்விட்டார். அது அதனால் நாங்க எல்லாமே வந்து அமைதியாக வெளியேறி விட்டோம்.
இப்படி நான் ஒரு கேள்வி கேட்டதால் கடந்த 2020-களில் எங்கோ கரூரில், ஏதோ ஒரு அலுவலகத்தில ஒரு குற்றச்சாட்டை மையப்படுத்தி என் வீட்டுக்கு ரைடு வந்திருக்கிறார்கள்.
சம்பந்தமே இல்லாமல் பொறியியல் கல்லூரியிலே போய் 'சோதனை' என்ற பெயரில இந்த சோதனையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம், மிசாவையே பார்த்த இயக்கம். இந்த ரெய்டுக்கெல்லாம் நாங்க பயம்பட மாட்டோம்.
கடைசியாக நமக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை நீதிமன்றம் தான். எனவே நீதிமன்றத்திலே நாங்கள் நிரபராதி என்பதை நான் கட்டாயம் நிரூபிப்பேன். 'மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயம்' என்ற ஒரு பழமொழி உண்டு. என்னை பொறுத்தவரை நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் பரிசுத்தமானவன், எந்த தவறும் செய்யாதவன்.
தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற ஒரு அற்புதமான அரசை 'திராவிட மாடல்' என்ற அடிப்படையில், நாட்டு மக்களுக்கு போய் சேர வேண்டிய அத்தனை திட்டங்களும் சேருவதற்கு ஒரு அற்புதமான ஒரு அரசை நடத்திக் காட்டி இருக்கிறார்கள். அதனால எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை, நான் நீதிமன்றத்தில நான் சந்திப்பேன்."
என் வீட்டில் ரூ 40 லட்சம் பறிமுதல் என்பதே வடிகட்டிய பொய். என் தொடர்புடைய எந்த இடத்திலும் பணத்தையும் கொண்டு போகவில்லை, வேறு எந்த பொருளையும் பறிமுதல் செய்யவில்லை.
எங்கேயோ கரூர்ல வந்து ஒரு சாலை போடப்பட்டது, அதற்காக ஏற்கனவே பில்லு போடப்பட்டிருக்கிறது, அதனால அங்க ஒரு தவறு நடந்திருக்கிறது, அந்த ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் நேரடியாக தொலைபேசியில தொடர்பு கொண்டு உதவி செய்தார் என்றுதான் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கிறது. இங்க இருந்து கரூர் எவ்வளவு தூரம்னு உங்களுக்கு தெரியும்.
அங்க வந்து ஒரு அலுவலகத்துல ஒரு டெண்டர் நடத்தனும்னாக்க, அங்க இருக்கிற கோட்டப் பொறியாளர் (டி.இ) தான் டெண்டர் நடத்துவாங்க. அதற்குரிய ஆவணங்கள் எல்லாம் அங்கதான் இருக்குமே ஒழிய, நான் அமைச்சராக இருந்த காரணத்தால் என் வீட்டில் எப்படி இருக்கும்? இவ்வாறு எ.வ.வேலு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications