முந்தும் மாணிக்கம் தாகூர்.. டெல்லியில் காய் நகர்த்தும் ஜோதிமணி.. அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்?
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவருக்கான ரேஸில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் முன்னணியில் இருந்தாலும், அவருக்கு செல்லக்குமார் மற்றும் ஜோதிமணி ஆகியோர் கடுமையான போட்டி அளித்து வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன. குறிப்பாக டெல்லியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து ஜோதிமணி காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்துவிட்ட நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற உள்கட்சி மோதலும், ரேஸும் காங்கிரஸ் வட்டாரத்தில் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தலைவர் நாற்காலிக்கான போட்டியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவருக்கு சவால் கொடுக்கும் வகையில் மூத்த தலைவர்கள் சிலர் காய் நகர்த்தி வருவது சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெக அரசுடன் கூட்டணி மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான விவாதங்களில் தீவிரமாகச் செயல்பட்ட எம்பி மாணிக்கம் தாகூர், தற்போதைய சூழலில் தலைவர் பதவிக்கான ரேஸில் முன்னிலையில் உள்ளார்.
கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆதரவு இவருக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், முன்னாள் எம்பி செல்லக்குமார் மற்றும் கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் மாணிக்கம் தாகூருக்குக் கடுமையான போட்டியை அளித்து வருகின்றனர். குறிப்பாக எம்பி ஜோதிமணியின் நகர்வுகள் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
டெல்லி மேலிடத் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் ஜோதிமணிக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் நெருக்கம் அனைவரும் அறிந்ததே. டெல்லியில் தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை முழுமையாகப் பயன்படுத்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற ஜோதிமணி தீவிரமாகக் காய் நகர்த்தி வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தமிழ்நாட்டில் காங்கிரஸை வலுவான பாதையில் கொண்டு செல்லக்கூடிய ஒரு துடிப்பான தலைவரை நியமிக்க டெல்லி மேலிடம் விரும்புகிறது. அதே நேரத்தில் உள்கட்சி கோஷ்டி பூசல்கள் தலைதூக்காமல் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயமும் அதற்கு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தலைவர் அறிவிப்பை எந்த சர்ச்சையும் இல்லாமல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாணிக்கம் தாகூரின் களப்பணி மற்றும் குடும்ப பின்னணி, மருத்துவர் செல்லக்குமாரின் சீனியாரிட்டி, ஜோதிமணியின் டெல்லி செல்வாக்கு என மூவர் முட்டிக்கொள்ளும் இந்த ரேஸில், இறுதியாக யாருக்குத் தலைவர் மகுடம் சூட்டப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி நேருக்கு நேர் மோதிக் கொள்வதற்கு அவர்களின் சமூக பின்னணியும் காரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications