தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. உசிலம்பட்டிக்கு வரும் விஜய்? சிடிஆர் நிர்மல்குமாரின் தேர்தல் கணக்கு
மதுரை: செப்டம்பர் 28ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் உசிலம்பட்டியில் தொடங்கி வைக்க இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்காக உசிலம்பட்டியில் இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் தொடங்கி வைக்க இருப்பதற்கான பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்தோம்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் மோதிரம் வழங்கும் திட்டம் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை ஜூன் கடைசி வாரத்திலேயே தமிழக அரசு வெளியிட்டது. இதற்காக ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன்பின் டெண்டர் வெளியிடப்பட்டு, அது ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 70:30 என்ற முறையில் வழங்கப்பட்டது. ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக 1.20 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழந்தையும் அரசு மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி முதல்வர் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். முதலில் சென்னையில் தொடங்கி வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இதனால் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதல்வர் விஜய் தரப்பு முடிவு எடுத்திருக்கிறது. உசிலம்பட்டியில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க ஆலோசனைகள் நடந்துள்ளன. இதனால் காவல்துறையினர் உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த இடத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
திடீரென உசிலம்பட்டியில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க முடிவு செய்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக விசாரிக்கையில், தாய்மாமன் உறவு கிராமங்களில் தான் அதிகமாக கொண்டாடப்படும். பெண்களை மையப்படுத்தியே இந்த திட்டம் தொடங்கப்படுவதால், கிராமப்புற பெண்கள் மத்தியில் இந்த திட்டம் எளிதாக கொண்டு சேர்க்கப்படும் என்று கணக்கு போட்டுள்ளனர்.
இதன் பின்னணியில் தவெகவின் தேர்தல் கணக்குகளும் அடங்கி இருக்கிறது. கிராமப்புறங்களில் தவெகவுக்கு அமைப்பு ரீதியாக இன்னும் பலம் அதிகரிக்கவில்லை. இதனால் கிராமங்களுக்கு விஜய் செல்லும் பட்சத்தில், அது மாறக்கூடும். இன்னொரு பக்கம் உசிலம்பட்டி அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் சொந்த ஊராகும். இதனால் விஜய் தனது ஊருக்கு வந்தால், அந்த பகுதியில் தன் செல்வாக்கு அதிகரிக்கும் என்று கணக்கு போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
