கஞ்சா வைத்திருந்த வழக்கு..மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்! 2 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி.!
மதுரை: காவலர்களை இழிவாகப் பேசியதான வழக்கில் கைது செய்ய சென்றபோது கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறை ஏடிஜிபி குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவை சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார்.

இதன் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் தேனியில் இருந்த போது சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவதூறு பேச்சு: இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் வரும் நிலையில் காவல்துறையினர் வழக்குகளையும் பதிவு செய்து வருகின்றனர். சைபர் கிரைம் வழக்கு, கஞ்சா வழக்கு இருக்கும் நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்தார். அந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். கஞ்சா வழக்குடன் கோவை சைபர் க்ரைம் எஸ்ஐ சுகன்யா, தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி, திருச்சி மாநகர பெண் காவலர், சேலம் சப்-இன்ஸ்பெக்டர் கீதா உள்ளிட்ட பலர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
8 வழக்குகள்: மேலும் சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் துறை அறிவித்தது. சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாக எட்டாவதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாமீன் கோரி மனு: இந்நிலையில் தேனி மாவட்டம் மே நான்காம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது அவர் கஞ்சா வைத்திருந்ததாக பழனி செட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் மே 7ஆம் தேதி அவர் மீண்டும் கைதானார். இதை அடுத்து கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கரிடம் காவல்துறை விசாரணை நடத்த அனுமதி கோரி போலீசாரும், அந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கரும் மதுரை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சவுக்கு சங்கர் ஆஜர்: இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் கோவையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் மதுரை அழைத்து வந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணையானது நீதிபதி செங்கமல செல்வன் முன்னிலையில் வந்தது அப்போது காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என கேட்பதால் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழை பெற்று வர வேண்டும் என உத்தரவிட்டார்.
2 நாள் காவல்: இதை அடுத்து சவுக்கு சங்கரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து சவுக்கு சங்கரை இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்த நீதிபதி விசாரணை முடிவடைந்த உடன் புதன்கிழமை மூன்று மணிக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும், சவுக்கு சங்கரை விசாரணையின் போது அவரது வழக்கறிஞர் காலை மதியம் இரவு என மூன்று நேரம் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் சவுக்கு சங்கரை பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications