மதுரை மேயர் பதவி.. குறி வைத்து காய் நகர்த்தும் காங்கிரஸ்.. பிடிவாதம் காட்டும் சிடிஆர் நிர்மல்குமார்!
மதுரை: மதுரை மாவட்டத்தின் மேயர் பதவியை கைப்பற்றுவதில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தவெக தரப்பில் திருப்பரங்குன்றம் தொகுதி மாவட்டச் செயலாளர் மருது பாண்டியனை சிடிஆர் நிர்மல்குமார் மேயர் பதவிக்கு முன்னிறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் மதுரை மேயர் பதவியை தங்கள் கட்சிக்கு கைப்பற்ற வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தவெகவினர் அடுத்தக் கட்டமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்க மாவட்டச் செயலாளர் தங்கள் பகுதிக்குள் இருக்கும் வார்டுகளை கணக்கெடுத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் கிட்டத்தட்ட மேயர் பதவிக்கான ஆட்களை தவெக அமைச்சர்கள் தேர்வு செய்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இணையக் கூடும் என்று சொல்லப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தவெக தலைமை மேற்கொண்டு வருகிறது.
இதனால் தவெகவினருக்கு அதிக வார்டுகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளன. கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. கும்பகோணம் மாநகராட்சி மேயராக சரவணன் பொறுப்பேற்றார். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 மேயர் பதவிகளை கேட்க திட்டமிட்டிருக்கிறது.
காங்கிரஸ் மட்டுமல்லாமல் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் மேயர் பதவிக்கு காய் நகர்த்தி வருகின்றன. அதில் காங்கிரஸ் கட்சி காரைக்குடி, மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளை கேட்க திட்டமிட்டுள்ளது. அதிலும் மதுரையில் மேயர் பதவியை கைப்பற்ற அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் மாணிக்கம் தாகூர் தரப்பு தீவிரமாக உள்ளது.
ஆனால் தவெகவில் மதுரை மேயர் பதவிக்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தன்னுடைய ஆதரவாளரான மருது பாண்டியனை முன்னிலைப்படுத்தி வருகிறார். திருப்பரங்குன்றம் தொகுதியை தனக்காக விட்டுக் கொடுத்ததால், மருது பாண்டியனுக்கு மேயர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கருதுகிறார்.
ஆனால் மாணிக்கம் தாகூர் மதுரையில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஏற்கனவே அமைச்சர் பதவி மதுரையைச் சேர்ந்த விஸ்வநாதனுக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மேயர் பதவியை கைப்பற்றினால் கட்சியை வளர்க்க முடியும் என்று நம்புகிறார். இதற்கு தவெகவினர் ஒப்புக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
