அஜித்குமார் தாக்கப்பட்ட கேமரா காட்சிகளை ரகசியமாக எடுத்துச்சென்றது யார்? ஐகோர்டில் இன்று விசாரணை
மதுரை: மதுரை திருநகரைச் சேர்ந்த மகாராஜன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் பதிவான கேமரா காட்சிகளை திருப்புவனம் போலீசாருடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த சிலரும், ரகசியமாக எடுத்துச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
மதுரை திருநகரைச் சேர்ந்த மகாராஜன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் தங்க நகை திருட்டு புகாரில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் பதிவான கேமரா காட்சிகளை திருப்புவனம் போலீசாருடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த சிலரும், ரகசியமாக எடுத்துச் சென்றுவிட்டனர். இதேபோல அஜித்குமார் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் இருந்த காயங்களையும் மறைக்கும் முயற்சியில் மர்மநபர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அஜித்குமார் குடும்பத்தினரிடம் சமரசம் பேசி, அதிக அளவில் பணம் தருவதாகவும் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத காவல் மரணங்களை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். அஜித்குமார் இறப்பின் உண்மைகளை மறைக்க முயற்சி செய்து வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மகாராஜன் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், அஜித்குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை ( இன்று) விசாரணைக்கு வருகின்றன. அந்த வழக்குகளுடன் இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். இதனிடையே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று தாக்கல் செய்கிறார். இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவர வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications