சீனியர்கள் செய்த சேட்டை.. வயதை குறைத்து தில்லாலங்கடி.. மதுரை திமுக கூட்டத்தில் நடந்த கலகல சம்பவம்!
மதுரை: மதுரையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் பதவிக்கு ஆசைப்பட்டு சில சீனியர் நிர்வாகிகள் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தற்போது மதுரை திமுகவில் பதவியில் இருக்கும் வட்ட, பகுதி, ஒன்றிய செயலாளர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது அதில் விபரங்கள் கேட்கப்பட்டது. அதில் சிலர் வயதை குறைத்து பதிவிட, இளம் நிர்வாகிகள் அதனை பொறுப்பாளர்களிடம் போட்டு கொடுத்தனர்.
திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் பயணம் மேற்கொண்டு செயற்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தற்போது திமுகவில் பதவியில் இருக்கும் வட்ட, பகுதி, ஒன்றியச் செயலாளர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர் என்று ஏராளமான மாவட்டங்களில் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்துவிட்டது. அந்த வகையில் நேற்று மதுரையில் 10 தொகுதிகளின் நிர்வாகிகளும் பங்கேற்ற செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட பொறுப்பாளர்களான செல்வராஜ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் இதில் பங்கேற்றனர்.
அதேபோல் முன்னாள் அமைச்சர் மூர்த்தி, தளபதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது தற்போது மதுரை திமுகவில் பொறுப்பில் இருந்து வரும் வட்ட, பகுதி, ஒன்றியச் செயலாளர்களிடம் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டு அவர்களின் விபரங்களை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டது. அதில் சீனியர்கள் பலரும் தங்களின் வயதை குறைத்து பதவிக்காக தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அந்த விண்ணப்பங்கள் தொடர்பாக இளம் நிர்வாகிகள் பலரும் தலைமைக் கழக பொறுப்பாளர்களான செல்வராஜ் மற்றும் ரவிச்சந்திரனிடம் போட்டு கொடுத்தனர். இதன்பின் உடனடியாக சீனியர் நிர்வாகிகள் அத்தனை பேரின் ஆதார் கார்டுகளை உடனடியாக கொண்டு வர சொல்லப்பட்டது. பின்னர் ஆதார் கார்டில் இருக்கும் விபரங்களை கொண்டு வயதில் திருத்தம் செய்யப்பட்டது.
திமுக மறுசீரமைப்பு குழு பரிந்துரையில் வட்டச் செயலாளர்களுக்கு 50 வயது, பகுதிச் செயலாளர்களுக்கு 60 வயது என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் சீனியர்கள் பலரும் பதவியை இழக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வயதில் தில்லாலங்கடி வேலை செய்யலாம் என்று மதுரை நிர்வாகிகள் சிந்தித்து இப்படியான வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனை அறிந்த பின் செயற்குழுவில் நிர்வாகிகளை கிண்டல் செய்து சீனியர்கள் பேசி சூழலை கலகலப்பாக்கினர்.


Click it and Unblock the Notifications
