PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ்
மதுரை: மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கட்சிக்குள் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. அந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும் அமைச்சருமானபிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஹாட்ரிக் வெற்றி காணும் முனைப்பில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு போட்டியாக மதுரை நகரைச் சேர்ந்த திமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பாரம்பரிய பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அவரது தாத்தா பிடி ராஜன் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர்.
அதேபோல் அவரது தந்தை பிடிஆர் பழனிவேல் ராஜன் முன்னாள் சட்டமன்ற சபாநாயகராகவும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அந்த அரசியல் மரபைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியாக பழனிவேல் தியாகராஜன் அரசியலில் செயல்பட்டு வருகிறார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அவர் தமிழக அமைச்சரவையில் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். தமிழக அமைச்சர்களில் நன்கு கல்வி கற்றவர்களில் ஒருவராகவும், தன்னுடைய கருத்துகளை நேரடியாக வெளிப்படுத்தும் அரசியல்வாதியாகவும் அவர் அறியப்படுகிறார். மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி
தற்போது மூன்றாவது முறையாக அந்த தொகுதியில் போட்டியிட அவர் விருப்ப மனு அளித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது. இந்நிலையில், இடையில் ஏற்பட்ட ஒரு ஆடியோ விவகாரம் காரணமாக கட்சித் தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது. அதன்பிறகு அவர் கட்சி தொடர்பான பொது செயல்பாடுகளில் அதிகமாக ஈடுபடாமல் இருந்து, தன்னுடைய தொகுதி தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
அதிமுக மற்றும் பாஜக
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மத்திய தொகுதியில் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் தலைவர்கள் இந்த தொகுதியை இலக்காகக் கொண்டு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழக வெற்றிக் கழகமும் அந்த பகுதியில் வலுவாக செயல்பட்டு வருவதால் இந்த முறை தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
திமுக சீட் போட்டி
இந்த சூழ்நிலையில், திமுக சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட பலர் விருப்ப மனு அளித்துள்ளனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தவிர, முக்கிய நிர்வாகிகள் 15-க்கும் மேற்பட்டோர் 'சீட்' கோரி கட்சித் தலைமையிடம் மனு அளித்துள்ளனர். மொத்தத்தில் 40-க்கும் மேற்பட்டோர் இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விருப்ப மனு அளித்தவர்களில் முன்னாள் மேயர் குழந்தைவேலு, திமுக கவுன்சிலர்கள் குழுத் தலைவர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினரான மா. ஜெயராம், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா, முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி உள்ளிட்ட பலர் அடங்குகின்றனர். மேலும் நிர்வாகிகள் சின்னம்மாள், சவுந்தர், பி.டி. மணிமாறன், சுபாஷ் மற்றும் கவுன்சிலர் நூர்ஜகான் உள்ளிட்டோரும் இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திமுக போட்டியிடும் தொகுதிகள்
இதற்கிடையில், பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களாக இருக்கும் மத்திய தொகுதியைச் சேர்ந்த 15 நிர்வாகிகள் தனியாக விருப்ப மனு அளித்துள்ளனர். இதனால் அந்த தொகுதியில் கட்சிக்குள் போட்டி உருவாகும் நிலை உள்ளது. மதுரை மாவட்டத்தில் திமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து கட்சித் தலைமை ஏற்கனவே ஆலோசனைகள் நடத்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை அரசியல்
மதுரை மத்தி, வடக்கு, மேற்கு, கிழக்கு, திருமங்கலம், சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையைப் பொருத்து மேலும் ஒரு தொகுதியில் கூடுதலாக போட்டியிட வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் மதுரை மத்திய தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சபரீசன் ஆலோசனை
அந்த வேறுபாடுகளை சமாதானப்படுத்தவில்லை என்றால் தேர்தலில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் மதுரைக்கு வந்த சபரீசன் மற்றும் மாநகர் செயலாளர் தளபதி உள்ளிட்டோர் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பில் பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டால் அவரது வெற்றிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications