அல்லல்படும் டாக்டர்கள்..அரசு தரும் நெருக்கடி! ’நலன் காக்கும் ஸ்டாலின்’-ஐ புறக்கணிப்போம் என வார்னிங்!

இதுதொடர்பாக அந்த சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர். சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் நான்கு பழைய மருத்துவ கல்லூரிகளில் இருந்து ஜூனியர் ரெசிடெண்ட் பதவியில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை ஆட்குறைப்பு செய்து புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு பணி நிரவல் செய்து சமீபத்தில் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
புதிதாக துவக்கப்படும் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பணியிடங்கள் பெரும்பாலான இடத்தில் உருவாக்கப்படவில்லை. குறிப்பாக ஜெய்கா திட்டத்தின் கீழ் பல நூறு கோடிகளில் சென்னை, கோயமுத்தூர், சேலம், திருநெல்வேலி மற்றும் மதுரையில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

தமிழக மருத்துவர்கள்
ஆனால் இந்த கட்டிடங்களில் துறைகளை ஆரம்பிப்பதற்கு எந்த ஒரு பணியிடமும் இதுவரையில் உருவாக்கப்படாமல் உள்ளது. அதேபோன்று வேலூர், தூத்துக்குடி போன்ற இடங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் துவக்கப்பட்டுள்ளன. இங்கும் இந்த மருத்துவமனைகளை நிர்வாகிப்பதற்கு எந்த ஒரு மருத்துவப் பணியிடமோ, செவிலியர் பணியிடமோ, பணியாளர்கள் பணியிடமோ இதுவரை உருவாக்கப்படவில்லை. பழைய மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், பணியாளர்கள் இங்கு பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
அதேபோன்று கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலும், பெரியார் நகர் மருத்துவமனையிலும் எந்த ஒரு பணியிடங்களும் உருவாக்கப்படாமல் பிற மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு இங்கு மருத்துவர்களும், செவிலியர்களும், பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ச்சியாக இதே போன்று எந்த ஒரு புதிய பணியிடங்களும் உருவாக்கப்படாமல் புதிய மருத்துவமனைகள் துவக்கப்படுவதை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
மருத்துவக் கல்லூரி
தற்பொழுது ஆட்குறைப்பு செய்யப்பட்டிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி ஆட்குறைப்பு செய்வதாக கூறுகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி பார்க்க வேண்டிய வெளி நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சைகள், பிரசவங்கள் ஆகிய குறியீடுகளில் அந்த விதிகளை விட சுமார் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகமாக பார்க்கப்படுகிறது.
மருத்துவ ஆட்குறைப்பு
உதாரணமாக 100 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ள மருத்துவ கல்லூரிக்கு 420 படுகைகள் இருந்தால் போதும். ஆனால் நூறு எம்பிபிஎஸ் சீட்டுகள் கொண்டுள்ள மருத்துவமனையில் சுமார் 800 லிருந்து 1000 படுக்கைகள் உள்ளன. அதேபோன்று நூறு எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தினசரி 800 புற நோயாளிகளை பார்த்தால் போதுமானது. ஆனால் தினசரி சுமார் 2000 புறநோயாளிகள் சராசரியாக இந்த மருத்துவ கல்லூரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
மருத்துவ பணியிடங்கள்
மருத்துவர்கள் நோயாளிகள் சராசரி என்று எடுத்துக் கொண்டால் கூட நமது தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மருத்துவர்கள் குறைவாகவே உள்ளனர். 24 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் சுமார் 12000 மருத்துவர்கள் மட்டுமே தற்போது மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிறார்கள். தற்பொழுது குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களை வைத்து அரசு மருத்துவ கல்லூரிகள் நடத்தி வரும் நிலையில் மருத்துவர்கள் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்வது தவறான செயலாகும். இதனால் மருத்துவர்கள் மட்டுமல்ல, ஆட்குறைப்பு செய்யப்படும் மருத்துவமனைகளில் நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள்.
நலம் காக்கும் ஸ்டாலின்
தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி தான் தற்பொழுது மருத்துவர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகிறார்கள் என்று அரசு கூறுமானால், தேசிய மருத்துவ ஆணையப் பணிகளில் வராத 1. குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள், 2. மாற்றுத் திறனாளி முகாம்கள், 3. விஐபி கான்வாய் டூட்டி, 4. மெடிக்கல் போர்டு, 5. நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற அனைத்து முகாம்கள், 6. கோர்ட் டூட்டி போன்றவற்றை புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்
தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இனி மேல் புதியதாக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டால் அதற்குரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னரே அந்த மருத்துவமனைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் வேறு வழி இன்றி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைக்கு தள்ளப்படும் என்றும் அறிவிக்கிறது." என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications