இந்துக்களை சீண்டி பார்க்காதீங்க! சாது மிரண்டால் காடு கொள்ளாது.. மதுரை மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு
மதுரை: இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள்.. சாது மிரண்டால் காடு கொள்ளாது.. இன்றைக்கும் முருகரை சீண்டிப்பார்க்க ஒரு கூட்டம் உள்ளது. மற்றவர்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்த அவர்கள் யார்? என் கடவுளை கேலி செய்துவிட்டு அதனை மதசார்பின்மை என்று கூறுகிறார்கள் என மதுரை முருகன் மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.
மதுரையில் முருகன் மாநாடு இன்று நடந்து வருகிறது. இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பவன் கல்யாண் பேச்சு
காலையில் இருந்தே அதிகளவிலான கூட்டம் வரத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டை ஒட்டி சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், 'இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள்.. சாது மிரண்டால் காடு கொள்ளாது.. இன்றைக்கும் முருகரை சீண்டிப்பார்க்க ஒரு கூட்டம் உள்ளது. மற்றவர்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்த அவர்கள் யார்? என் கடவுளை கேலி செய்துவிட்டு அதனை மதசார்பின்மை என்று கூறுகிறார்கள்”. பவன் கல்யாண் பேசியதாவது:-
உலகின் முதல் புரட்சித் தலைவர்
முருக பெருமானுக்கு வணக்கம்.. மதுரை மக்களுக்கு வணக்கம். எல்லாருக்கும் வணக்கம்.. என்னை மதுரை வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன்.. எனக்கு துணிச்சல் தந்தது முருகன். மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் முதல் மற்றும் கடைசி அறுபடை வீடுகள் இங்கு தான் உள்ளன. முருகனின் தாயாரும் மதுரையில் தான் இருக்கிறார்.
நமது நாட்டு நம்பிக்கைக்கு அழிவில்லை. அதனை யாராலும் அழிக்க முடியாது. நமது கலாசாரம் ரொம்ப ஆழமானது. நம்மை அசைக்க யாராலும் முடியாது. குமரியில் இருந்து காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக இருந்தது. இது இன்றும் ஆழமாக இருக்கிறது. இனிமேலும் ஆழமாக இருக்கும். இது தான் நம் தெய்வீக மண்ணின் பலம். உலகை தீமை சூழும் போது அதை அறுப்பது தான் அறம்.. எல்லாரையும் சமமாக பார்ப்பது அறம்.. தீயவர்களை வதம் செய்வது அறம்.. அதன் பெயர் புரட்சி.. அதனை செய்பவர் புரட்சித் தலைவர்..
எனவே உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப் பெருமான். நாம் எல்லாரும் உலகின் முதல் புரட்சித் தலைவருக்காக தான் ஒன்றாக இணைந்துள்ளோம். முருகன் எல்லா இடத்திலேயேயும் பரந்து விரிந்து இருக்கிறார்.
சீண்டி பார்க்காதீர்கள்..
ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம்.. ஒரு முஸ்லீம் முஸ்லீம்களாக இருக்கலாம்.. ஆனால் ஒரு இந்து இந்துவாக இருந்தாலே இவர்களுக்கு பிரச்சினை. ஒருவன் இந்துவாக இருந்துவிட்டால் அவன் மதவாதி.. இது தான் இவர்களது எண்ணமாக இருக்கிறது. என் நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. அதனை கேட்க நீங்க யார்.. உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேட்கவில்லை. அதே நாகரீகத்தை நீங்கள் கடைப்பிடியுங்கள்.
என் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.. அவமரியாதை பண்ணாதீர்கள்.. முருகன் பற்றி கேள்வி கேட்கும் நீங்கள்? அரேபியாவில் இருந்து வந்த மதங்கள் பற்றி இதே கேள்வியை உங்களால் கேட்க முடியுமா? அதற்கான துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா.. அதனால் தான் சொல்கிறேன் சீண்டி பார்க்காதீர்கள்.. சாது மிரண்டால் காடு பொருக்காது.. காடு கொள்ளாது..












Click it and Unblock the Notifications