“ஈகில் இஸ் கம்மிங்”.. தீர்ப்பு வந்தாலும் வந்துச்சு! “ஃபுல் போர்சில்” எடப்பாடி! இனி ஒரே அதிமுகவாம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இருந்தே எடப்பாடி பழனிசாமி தனது மனதில் இருக்கும் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பேசி உள்ளார்.
மதுரை: ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டியது செல்லும் என்று உச்சநீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இருந்தே மனதில் இருக்கும் பல்வேறு கருத்துக்களை இன்று திருமணம் நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பில் கொட்டித்தீர்த்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் திமுகவை விமர்சித்து உள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை வெடித்த பிறகு ஓ பன்னீர்செல்வம் தரப்பின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு 2 வது பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது.
அதில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டு, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், அதிமுக பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் தேர்வு செய்யப்பட்டனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அதேபோல் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று வெளியான தீர்ப்பால் எடப்பாடி பெரு மகிழ்ச்சியில் இருப்பதை அவரது பேச்சுக்களின் மூலம் பார்க்க முடிகிறது.

மதுரையில் கிடைத்த குட் நியூஸ்
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்த சமத்துவ திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றபோது எடப்பாடி பழனிசாமிக்கு இந்த செய்தி கிடைத்து இருக்கிறது. உடனே அந்த திருமண விழா மேடையிலேயே மிகவும் உற்சாகத்துடன் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய மனதில் இருந்த பாரத்தை எல்லாம் இறக்கி வைத்துவிட்டார்.

மனம் திறந்த எடப்பாடி
"எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் கோயிலுக்கு சென்று இன்று 51 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கும் அற்புதமான நாளில் நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்று நான் வேண்டினேன். தெய்வ பக்தியுடன் இருக்கும் கோயில் இது. இரு தலைவர்களும் எங்களுக்கு அருள் கொடுத்தார்கள். அடுத்த சில நிமிடத்தில் அற்புதமான செய்தி வந்தது." என்று தெரிவித்தார்.

சிலரை தவிர
இந்த தீர்ப்பை நினைத்து தூங்காமல் இருந்தேன் என்பதை வெளிப்படையாக பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பாகவும் தெரிவித்தார். "அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான முடிவை இனி எடுப்போம். சிவில் கோர்டை அவர்களை நாடட்டும். உச்சநீதிமன்றத்திலேயே நாம் வெற்றிபெற்று விட்டோம். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்." என்றார்.

திமுக மீது விமர்சனம்
தொடர்ந்து ஈரோடு கிழக்கு தேர்தல், திமுகவையும் அவர் விடவில்லை. "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். தேர்தல் ஆணையத்திடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகாரளிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் இந்தியாவிலேயே எங்கும் நடக்கவில்லை." என்றார்.

இனி ஒரே அதிமுக
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை எட்டப்பன் என்றும் திமுக பி டீம் என்றும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, "இனி ஊடகங்களும் பத்திரிகைகளும் அதிமுக 3 ஆக, 4 ஆக இருக்கிறது என்று செய்தி வெளியிடாதீர்கள். ஒன்றாக ஒற்றுமையாக உள்ளது என்று கூறுங்கள். எங்கள் பிரச்சனையை வைத்து 6 மாதங்களாக செய்தி வெளியிட்டுக்கொண்டு இருந்தீர்கள்." என்று மனதில் இருந்த பாரத்தையும் இறக்கி வைத்தார்.

ட்விட்டரில் கருத்து
தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "வரலாற்று சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி, புரட்சித்தலைவர் "எம்ஜிஆர்", புரட்சிதலைவி "அம்மா"ஆகிய இருபெறும் தலைவர்களின் நல் ஆசியுடனும், ஒன்னரை கோடி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடனும், கழகத்தை வழிநடத்தவும், அம்மா அவர்கள் கண்ட நூறாண்டு சரித்திரக் கனவை நனவாக்கவும் உயிர் மூச்சுள்ளவரை உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications