செங்கோட்டையனை நீக்க தயக்கமா.. அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும்.. எடப்பாடி பழனிசாமி வார்னிங்!
மதுரை: ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பற்றி பேசுவதே வேஸ்ட் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எந்த தயக்கமும் இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.
தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகிய மூவரும் கூட்டாக காரில் வந்து மரியாதை செலுத்தினர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், அதிமுகவில் இருந்து என்னை எடப்பாடி பழனிசாமி நீக்கினாலும் மகிழ்ச்சிதான். என்னை நீக்கினால் அடுத்த கட்ட நடவடிக்கையை தெரிவிப்பேன் என்றார்.

அதேபோல் எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் எதிரி என்று டிடிவி தினகரன் கூறிய போது செங்கோட்டையன் அருகிலேயே நின்றிருந்தார். இதன்பின் சசிகலாவையும் சந்தித்தார். இதனால் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசுகையில், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரை பற்றி பேசுவதே வேஸ்ட். இவர்கள் மூவருமே திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்கள். 3 பேரும் இல்லாததால் தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமடைந்துவிட்டதாக கூறுவது தவறானது. கட்சியில் இருந்து களைகள் நீங்கிவிட்டது. இனி அதிமுக செழித்து ஆட்சி அமைக்கும்.
அதிமுகவில் இருந்து கொண்டே சில உள்குத்து வேலைகள் செய்ததால் தான், 2021ஆம் ஆண்டு அதிமுக தோல்வியை அடைந்தது. செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் இல்லை. ஏற்கனவே அவரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுவிட்டன. அதிமுகவில் யார் துரோகம் செய்தாலும், நடவடிக்கை எடுக்கபப்டும்.
அதிமுகவை எத்தனை எட்டப்பர்கள், துரோகிகள் வந்தாலும் வீழ்த்த முடியாது. எங்கள் பக்கம் இருப்பது உண்மையாக அதிமுக. செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமாக இருக்கும் சூழலில், கொங்கு மண்டலமான ஈரோடு மாவட்டத்திலும் பலவீனம் அடைய வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications