ஓபிஎஸ் அந்த முடிவை எடுத்தாலும் நாங்க போக மாட்டோம்.. என்ன டிடிவி தினகரன் பட்டுனு இப்படி சொல்லிட்டாரு?
மதுரை: எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர 90% நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விருப்பமில்லை, ஓபிஎஸ் அந்த முடிவை எடுத்தாலும் நாங்கள் எடுக்க மாட்டோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என டிமாண்ட் செய்ததால் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டதாக கூறுப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது, ஊடகங்களில் வரும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய தினகரன், "நாங்கள் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் சொல்வோம். ஓ.பன்னீர்செல்வம் எனது பழைய நண்பர். அவர் ஏதோ கோபத்தில் செய்தது. எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் நண்பர் என்ற முறையில் மீண்டும் இணைவது என்பது நாட்டில் எங்கும் நடப்பது தான்.
ஓபிஎஸ் தனித்து முடிவு எடுப்பார். நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என மட்டும் தான் கூறியுள்ளோம். அவருடைய செயல்பாடுகளில் எதுவும் சொல்ல இயலாது. அமமுக எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி செல்லக்கூடாது என 90 சதவீத அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புகின்றனர். ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியுடன் உடன் கூட்டணி சேர்ந்தாலும் நாங்கள் சேர மாட்டோம் தனியாகவே போட்டியிடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டியிலின பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை இது தான் சமூக நீதியா என ஆளுநர் ரவி பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், "பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா செயல்பாடுகளால் தான் தமிழ்நாடு பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகநீதி உள்ள சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தீண்டாமை இல்லை, சாதி சமய வேறுபாடு இல்லை, கல்வி, தொழிலில் பிறப்பால் எந்த பிரிவினையும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றும் தனிநபர்களின் செயல்பாடுகளை வைத்து ஆளுநர் பேசுவது தவறு" என்றார்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உடன் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செயல்பட விருப்பம் காட்டி வரும் சூழலில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் இணைந்தாலும் நாங்கள் இணைய மாட்டோம் எனக் கூறியுள்ளார். இதனால், ஓபிஎஸ் - தினகரன் இடையே கருத்து வேறுபாடுகள் எழக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications