உச்சாணியில் ஏறுது தமிழ்நாடு.. முதல் அரசு பஸ் கண்டக்டர் ரம்யா.. காரணமே ஸ்டாலின்தான்.. சபாஷ் முதல்வர்
மதுரை: பெண்கள் எல்லாத்துறைகளிலும் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளதை போலவே, கண்டக்டர் லைசென்ஸ் எடுக்கவும் முன்வரவேண்டும் என்று ரம்யா என்ற பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார். யார் இவர்?
மதுரை, கே.புதூர் லூர்து நகரை சேர்ந்தவர் பாலாஜி... இவரது மனைவி பெயர் ரம்யா.. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.. பாலாஜி, கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், காரைக்குடி மண்டலம் மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக வேலை பார்த்தவர்.. ஆனால், திடீரென கொரோனாவில் இறந்துவிட்டார்..

குடும்ப வறுமை: குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலை பார்த்து வந்தநிலையில், திடீரென பாலாஜி இறந்துவிட்டதால், அந்த குடும்பமே போதிய வருமானமின்றி அவதிப்பட்டது.. அதுமட்டுமல்ல, வேலைக்கு போகும் நிலைமையில், பாலாஜி வீட்டில் யாருமே இல்லாத நிலையில், கடும் வறுமைக்கு குடும்பம் ஆளாகிவிட்டது.
இதனால், என்னசெய்வதென்றே தெரியாமல் ரம்யா, கணவர் இறந்ததால் கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை கேட்டு, போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பம் செய்தார்.. அத்துடன் தன்னுடைய குடும்ப கஷ்டத்தை சொல்லி, துயரமான நிலையையும் விளக்கி முதல்வர் ஸ்டாலினுக்கும் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். டிரைவர் பணியை தவிர்த்து, வேறு எந்த பணியையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் ரம்யா தெரிவித்திருந்தார்.
பரிந்துரை: பின்னர், ரம்யாவின் மனுவை கருணையுடன் பரிசீலிக்குமாறு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.. ரம்யாவின் கல்வித்தகுதிக்கேற்ப உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சிவசங்கரும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, உடனடியாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. கல்வி தகுதிக்கு ஏற்ப கண்டக்டர் பணியாற்ற தயாராக இருப்பதாக ரம்யாவும் கூறியிருந்தார்.. இந்நிலையில், கடந்த 14ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில் ரம்யா உள்ளிட்ட 40 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
அதிரடி உத்தரவு: அதன்படி, இவருக்கு மதுரை முதல் ராமேஸ்வரம் செல்லும் பஸ்ஸில் கண்டக்டர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்றைய தினம் ரம்யா பணியில் சேர்ந்துவிட்டார்.. மதுரை உலகனேரி கிளையில் கண்டக்டர் பணியை ஏற்றுக் கொண்டார்.
நேற்றிலிருந்து 10 நாட்களுக்கு பயிற்சி கண்டக்டர் என்ற அடிப்படையில் ரம்யா, இந்த பணியில் சேர்ந்துள்ளார்.. இதன்மூலம், அரசு போக்குவரத்து கழக முதல் பெண் கண்டக்டர் என்ற பெருமையையும் ரம்யா பெற்றுள்ளார்.. இவருக்கு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
குடும்ப சூழல்: ரம்யாவுக்கு 35 வயதாகிறது.. தனக்கு கிடைத்த இந்த பணிகுறித்தும், அங்கீகாரம் குறித்தும், ரம்யா சொல்லும்போது, "என் கணவர் பாலாஜியை கொரானாவால் இழந்துவிட்டு, குழந்தையையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்..
அப்போதுதான், முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினேன்.. என்னுடைய குடும்ப சூழலை கருத்தில் கொண்ட முதல்வர் ஸ்டாலின், என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். என் கணவர் டிரைவராக பணியாற்றிய இடத்திலேயே கண்டக்டர் வேலை எனக்கு கிடைத்துள்ளது. இதற்கு காரணமே முதல்வர் தான்.
பெண்கள் நலன்: ஆணுக்கு பெண் சமம் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முதல்வர் நிறைவேற்றி வருகிறார்... பெண்களாலும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் என்பதை நிறைவேற்றும் வாய்ப்பையும் எனக்கு தந்துள்ளார்.. பெண்களின் நலனில் எப்போதும் அக்கறை காட்டும் முதல்வருக்கு என்னுடைய நன்றி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பிளஸ் 1 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். எனது கல்வித்தகுதி அடிப்படையில் கண்டக்டராக பணி வழங்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டிலேயே அரசு போக்குவரத்து கழகத்தில் முதல் பெண் கண்டக்டர் என்ற அங்கீகாரம் எனக்கு இப்போது கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகவே இதை நான் பார்க்கிறேன்.
பூரிப்பு: பெண்கள் எல்லாத்துறைகளிலும் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளதை போலவே, கண்டக்டர் லைசென்ஸ் எடுக்கவும் அவர்கள் முன்வரவேண்டும். முதல்வரின் நடவடிக்கையால் பெண் சமூகமே முன்னேறும்..
10 நாள் பயிற்சிக்கு பிறகு மதுரை - ராமேஸ்வரம் பஸ்சில் சென்று வருகிறேன். ஆண்கள் மத்தியில் பெண்ணான நான் பணிபுரிவது மற்ற பெண்களுக்கு பெருமையாகவும், முன்னுதாரணமாகவும் உள்ளது என்று என்னை பலரும் பாராட்டுகிறார்கள்" என்று பூரித்து சொல்கிறார் ரம்யா.












Click it and Unblock the Notifications