போனை போட்டவுடன் ஓடிய அண்ணாமலை.. சல்லி சல்லியாய் நொறுக்கிய செல்லூர் ராஜூ
மதுரை: திமுகவுடன் பாஜக ரகசிய கூட்டணியில் இருப்பதாக அதிமுகவினர் அண்ணாமலையை விமர்சித்து வரும் நிலையில், அதனை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில் கைப்பேசியில் வந்த அழைப்பின் பேரில் அண்ணாமலை கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் ஒடோடி சென்று பங்கேற்றுள்ளார், திராவிட கட்சிகளை விமர்சனம் செய்த பேசிய அவர் தற்போது புகழ்ந்து பேசி மாட்டிக் கொண்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் கலந்து கொண்டது, கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அண்ணாமலை பங்கேற்ற நிலையில், திமுக - பாஜக கூட்டணி என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் திமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் திராவிட கட்சிகளை விமர்சனம் செய்த பேசிய அவர் தற்போது புகழ்ந்து பேசி மாட்டிக் கொண்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் பேசிய அவர்,"கள்ளர் சீரமைப்பு துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் வகையில் அரசாணை வெளியிட்டதாக தகவல் வந்துள்ளது. தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு துறையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் மதுரையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள பிரமலை கள்ளர் சமுதாய மக்கள் பாதிக்கப்படுவார்கள், கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகள் மூடப்படவுள்ளது. விமர்சனத்திற்கு ஒரு எல்லை வேண்டும் என சொன்ன அண்ணாமலை திமுகவினரை மிக கேவலமாக பேசி உள்ளார். கைப்பேசியில் வந்த அழைப்பின் பேரில் அண்ணாமலை கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் ஓடோடி சென்று பங்கேற்றுள்ளார். திராவிட கட்சிகளை விமர்சனம் செய்து பேசிய அண்ணாமலை தற்போது புகழ்ந்து பேசி மாட்டிக் கொண்டார். ஆடு சரியாக மாட்டிக் கொண்டது. பயத்தின் காரணமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்து முதல்வர் விழா நடத்தி உள்ளார்.
அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை துறைகளுக்கு பயந்து மத்திய அரசை அழைத்து விழா நடத்தி உள்ளனர் திமுகவினர். அரசியலில் தான் ஒரு கத்துக்குட்டி என்ற விஷயத்தை அண்ணாமலை மீண்டும் நிரூபணம் செய்து விட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்த அண்ணாமலை அரை வேக்காட்டு தனமாக பேசி வருகிறார்.
நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு இன்னும் வரவே இல்லை. ஒரு இளைஞர் அரசியலுக்கு வருகை தர இருப்பதை திமுக அரசு தடுக்கிறது. காரணம் தமிழகத்தில் தங்கள் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது என திமுக நினைக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏன் திமுக அரசு அனுமதி மறுக்கிறார்கள்? இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என பேசியுள்ளார் செல்லூர் ராஜு.












Click it and Unblock the Notifications