மதுரையில் கோலாகலம்.. ஷோபனாவுக்கு கல்யாணம்.. முதல்வர் ஸ்டாலின் "அப்பா" தந்த இன்ப அதிர்ச்சியால் ஹேப்பி
மதுரை: மதுரை ஷோபனாவுக்கு நேற்று திருமணம் நடந்துள்ளது.. இந்து திருமணத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார்.. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவிக்கும் தந்தையாக, தாயுமானவராக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என்று ஷோபனாவின் அப்பா நன்றி கூறியிருக்கிறார்.. யாரிந்த ஷோபனா? நினைவிருக்கிறதா?
மதுரை மாவட்டம், திருவேடகம் கிராமத்தை சேர்ந்தவர் ஷோபனா. இவர் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். ஆனால், பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த 2021ம் ஆண்டு கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், மாணவி ஷோபனாவிற்கு மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் BBA பட்டப்படிப்பு படிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ததையடுத்து, ஷோபனா கல்லூரியில் சேர்ந்தார்.
நேரில் வரவழைத்து பேசிய முதல்வர்
இதற்கு நன்றி தெரிவிப்பதற்கு சென்னை வருவதற்குகூட தன்னிடம் பணவசதி இல்லை என்று அந்த மாணவி ஸ்டாலினுக்கு இன்னொரு கடிதம் மூலம் தெரிவித்தார். உடனே முதல்வர் ஸ்டாலின், விரைவில் தானே சந்திப்பதாக உறுதி அளித்திருந்தார்.. பிறகு 2021, அக்டோபர் 29 ம் தேதி பல்வேறு அரசு திட்டப் பணிகளின் ஆய்வுப் பணிக்காக மதுரைக்கு சென்றிருந்தார்.
அப்போது அரசு வாகனத்தை திருவேடகம் கிராமத்திற்கு அனுப்பி வைத்து, மாணவி ஷோபனா மற்றும் அவரது பெற்றோரையும் மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்தார் முதல்வர் ஸ்டாலின்..
புத்தகங்கள், நிதியுதவி
அங்கு குடும்பத்தினரோடு வந்த ஷோபனாவுக்கு, பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள், புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் நிதியுதவி வழங்கி, வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின். தன்னை நேரிலேயே சந்தித்து ஆசியும், உதவியும் வழங்கியதை கண்டு, பூரித்து போனார் அந்த மாணவி.
பிறகு மீண்டும் தனது உயர்கல்வி படிப்பு முடிந்ததற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, மாணவி ஷோபனா 3 ஆண்டு பட்டபடிப்பை முடித்தார். அப்பெண்ணுக்கு தொழிலாளர் நலத்துறையில் (சமூகநலப் பாதுகாப்பு பிரிவு) கணினி ஆப்பரேட்டராக பணியாற்ற வாய்ப்பளித்தார். அத்துடன், கடந்த நவம்பர் மாதம், ஷோபனாவை நேரில் சந்தித்து, அவருக்கு வாழ்த்து சொல்லி, தான் கையெழுத்திட்ட புத்தகங்களை பரிசாக அளித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
ஷோபனாவுக்கு கல்யாணம்
இந்நிலையில் நேற்று ஷோபனாவுக்கு மதுரையில் திருமணம் நடந்துள்ளது. தண்டலை வீரமணி கார்த்திக் என்பவருடன் மதுரை பூங்கா முருகன் கோயிலில் திருமணம் நடந்தது. தன்னுடைய திருமணம் குறித்து அழைப்பிதழை முதல்வருக்கு அனுப்பியிருந்த ஷோபனா, வாழ்த்தும்படி தெரிவித்து இருந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்துடன் சென்ற அமைச்சர் மூர்த்தி மணமக்களை வாழ்த்தினார்.
கல்லூரிப் படிப்பு, அரசுப் பணி, திருமண வாழ்த்து என மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு "அப்பா" போன்று நல் உள்ளத்துடன் உதவி வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் - நெகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்த புதுமண தம்பதி.
வாழ்த்து செய்தியை அனுப்பிய முதல்வர்
முதலமைச்சர் ஸ்டாலின் சோபனா - வீரமணி கார்த்திக் தம்பதியினருக்கு திருமணம் வாழ்த்து செய்தி அனுப்பிவைத்தார். இதையடுத்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முதலமைச்சர் உத்தரவுபடி நேரில் சென்று திருமணத்தை நடத்திவைத்தார். பிறகு திருமண வாழ்த்து மடலை மணமக்களிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மணமகள் ஷோபனா இதுகுறித்து சொல்லும்போது, "எனக்கு கல்லூரி படிப்புக்கு உதவி செய்து, வேலையும் கிடைக்க உதவி செய்த அப்பா முதலமைச்சர் ஸ்டாலின்.. இப்போது என்னுடைய திருமணத்திற்கு வாழ்த்து செய்தியை அமைச்சர் மூலம் கொடுத்து அனுப்பியது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. முதல்வர் ஐயா அவர்களுக்கும், அமைச்சர் ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மீண்டும் மீண்டும் நிரூபணம்
பிறகு ஷோபனாவின் அப்பா இதை பற்றி கூறும்போது, "என்னுடைய மகளின் கல்லூரி படிப்பு முதல் தற்போது திருமணம் வரை அனைத்திற்கும் வாழ்த்து தெரிவித்து வாழ்க்கையில் உயர்வதற்கு காரணமாக இருந்த தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவிக்கும் தந்தையாக, தாயுமானவராக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கும் விதமாக இந்த மதுரை நிகழ்வானது நடைபெற்றுள்ளது என்று நெகிழ்ந்து கூறினார்.












Click it and Unblock the Notifications