தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஹைகோர்டில் நடந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
மதுரை: ஓய்வுபெறும் நாளில் அரசு பணியாளரை இடைநீக்கம் செய்வது சட்டவிரோதமானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கியமான உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்கள் அவர்கள் செய்த தவறுக்காக அல்லது அவர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டிற்காக ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. அப்படி ஓய்வூ நாளில் பணியிடை நீக்கம் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு முறையாக ஓய்வு பெற்றதற்கான சான்றிதழ்களோ அல்லது அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிய பலன்களோ கிடைக்காமல் போகும். பல நாட்கள் சட்டப்போராட்டம் நடத்தி தான் பணபலன்களை பெற முடியும் என்கிற நிலை உள்ளது.

ஓய்வு பெறும் நாளில் அல்லது அதற்கு முதல் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெற வேண்டும் என்றால் அதற்கு நீதிமன்றத்தில் சென்று முறையிட்டு தீர்வு பெற வேண்டும் அல்லது விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆக வேண்டும் என்கிற நிலை இருக்கிறது.
இதனால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறப்போகும் காலத்தில் ஒருவித பதற்றத்துடன் பணியாற்றும் நிலை ஏற்படுகிறது. அப்படி ஒரு அரசு ஊழியர் பணியிடை நீக்கத்தால் பாதிக்கப்பட்டார். அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தனக்கான தீர்வினை பெற்றுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சிவகங்கையைச் சேர்ந்த சரவணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சரவணன் ஆகிய நான், சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் பணியாற்றினேன். நான் கடந்த 31.10.2022 அன்று ஓய்வு பெறுவதாக இருந்தேன். அன்று என்னை தற்காலிக பணி நீக்கம் செய்து, குற்றச்சாட்டு குறிப்பாணையை வழங்கினார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். என்னை தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் சரவணன் கூறியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், எந்த ஒரு அரசு ஊழியர் மீதும் ஓய்வுபெறும் கால கட்டத்தில், பணி நீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மனுதாரர் மீதான நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அவர் முறையாக ஓய்வு பெற்றதாக சான்றிதழ் மற்றும் உரிய பணப்பலன்களை பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications