முஸ்லிம் என்றாலே சமூக விரோதியா.. இப்படி யோசிக்கிறதே தப்பு! அரசு அதிகாரிகளுக்கு ஹைகோர்ட் நீதிபதி டோஸ்
மதுரை: இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று நிலவும் கருத்து ஏற்கத்தக்கது அல்ல என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்து இருக்கிறார்.
நெல்லையை சேர்ந்தவர் காவலர் ஹாஜா சரீஃப். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டில் 2 ஆம் நிலை காவலர் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இருக்கிறார். ஆனால், அவருக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடித்து வந்து இருக்கிறார்கள். மனித நீதி பாசறை என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்த காரணத்தால் பணி நியமனம் செய்யப்ப்படவில்லை என தெரிவித்த அவர், இது தொடர்பாக தான் தொடர்ந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு பணி ஆணை வழங்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் செயல்படுத்தவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் தனக்கு பணப் பலன் மற்றும் பதவி உயர்வு அளித்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "2007-08 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றேன். ஆனால் எனக்கு பணி நியமனம் வழங்கவில்லை. மனித நீதி பாசறை அமைப்பில் உறுப்பினராக உள்ளதால் எனக்கு பணி நியமனம் வழங்கவில்லை. 2012 ஆம் ஆண்டில் பணி ஆணை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் பணி வழங்கப்படவில்லை." என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று நீதிபதி பட்டு தேவானந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், "காவலர் ஹாஜா சரீஃப் அடைந்த் மன வேதனையை இந்த நீதிமன்றத்தால் உணர முடிகிறது. இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத செயல்களில் ஈடுபவர்கள் என்று நிலவி வரும் கருத்து ஏற்கக்கூடியது அல்ல. காவலர் ஹாஜா சரீஃப் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை ஏற்க முடியாது.
ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்கு சேவை செய்யவும், தங்களின் திறமையை நிரூபிப்பதற்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். இங்கு யாரும் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை. 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகாரிகளும் தற்காலத்துக்கு ஏற்ப சிந்தனை, மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். மனிதாபிமானம் இல்லை என்றால் இந்த உலகத்தில் யாருமே வாழ முடியாது." என்று கருத்து தெரிவித்த நீதிபதி, காவலர் ஹாஜா சரீஃபுக்கு பணப் பலன் மற்றும் பதவி உயர்வை வழங்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications