சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க உத்தரவு! மனைவி தொடர்ந்த வழக்கில் அதிரடி!
மதுரை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து, அந்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊடகங்களோ, வேறு யாருமோ அனுமதிக்கப்படக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலரான இவர் சமூக ஆர்வலரும் கூட. இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார்.

ஆனாலும், அஞ்சாமல் தொடர்ந்து இதுபோன்று கனிம வள கொள்ளைக்கு எதிராக மனுக்களை கொடுத்து வந்துள்ளார். பெயருக்கு ஒரு அரசு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கனிமங்கள் வெட்டி அள்ளப்பட்டு, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருவது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 10 ஆம் தேதி ஜகபர் அலி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் கனிம வள கொள்ளை தொடர்பாக மனு அளித்துள்ளார். சில குவாரிகளின் பெயர்களுடன் பல ஆதாரங்களையும் இணைத்து பல நூறு கோடிக்கான கனிம வள கொள்ளை நடந்துள்ளதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி ஜகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கனிம வள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கடைசியாக புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் பல ஆதாரங்கள், ஆவணங்களுடன் மனு கொடுத்த அடுத்த 7 நாட்களில் டிப்பர் லாரி மோதி உயிரிழந்தது சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி விபத்தில் இறந்த விவகாரத்தில் ஜேசிபி மற்றும் லாரி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கல் குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
உயிரிழந்த ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்குப் பதிவு செய்து இதில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராசு அவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காக அழைத்து வரப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் காசிநாதன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையா சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஜகபர் அலி கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிகள் குறித்து புகார் அளித்ததற்காக ஜகபர் அலி கொலை செய்யப்பட்டதாக ஜகபர் அலியின் மனைவி மரியம் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். தனது கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை இதுவரை வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
உடற்கூறு ஆய்வு தொடர்பான வீடியோ பதிவு கோரிய எங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 10 நாட்கள் தாமதத்திற்கு பின்பு உடற்கூறாய்வு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலில் நடைபெற்ற உடற்கூறாய்வு உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து, இரண்டு தடய அறிவியல் நிபுணர்களோடு, எங்கள் நிபுணரையும் இணைத்து, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுத்து, மறுஉடற்கூறாய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்க் கிளையில் நீதிபதி நிர்மல் குமார் விசாரணைக்கு வந்த நிலையில், மூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உடல் எக்ஸ்ரே செய்யப்படுவது தொடர்பான எந்த புகைப்படமும் விசாரணைக்காக தவிர வேறு இடங்களில் பகிரப்படக்கூடாது. திருமயம் தாசில்தார் முன்னிலையில் ஜகபர் அலியின் உடல் புதைக்கப்பட்ட இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜகபர் அலி உடலை எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், ஊடகங்களோ, வேறு யாருமோ அனுமதிக்கப்படக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications