முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தைக்கு விதிக்கப்பட்ட ரூ.15.5 கோடி அபராதம் ரத்து.. ஐகோர்ட் அதிரடி!
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை ராமசாமிக்கு ரூ.15.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், உரிய நோட்டீஸ் அளித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழில் சார்ந்த தனியார் கல்குவாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகளில் விதி மீறல்கள் ஏதும் நடைபெற்றுள்ளதா என்பதை கண்டறிய மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கோட்டாட்சியர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழு சார்பில் குவாரிகளில் கூட்டுபுலத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, விதிமீறல்கள் கண்டறியப்பட்ட குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை ராமசாமியின் குவாரிக்கு ரூ.15.5 கோடி அபராதம் விதித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, ராமசாமி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை எம்.ராமசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா அத்திபாளையத்தில் 2011- 2021 வரை பத்தாண்டுகள் பட்டா நிலத்தில் கல் குவாரி நடத்த உரிமம் பெற்றிருந்தேன். குவாரி உரிமம் காலாவதியாக ஒரு மாதம் இருந்த நிலையில் நிலத்தை கண்ணப்பன் என்பவருக்கு விற்றேன். பின்னர் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி மனு அளித்தேன். குவாரியில் எந்த விதிமீறலும் இல்லை என புகளூர் வட்டாட்சியர் அளித்த அறிக்கை அடிப்படையில் குவாரி உரிமத்தை ரத்து செய்து கரூர் ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், 'நான் நடத்திய குவாரியில் சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக கூறி எனக்கு ரூ.15.55 கோடி அபராதம் விதித்து கரூர் கோட்டாட்சியர் 12.7.2023-ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பு எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை. இதனால் அபராதம் விதித்து கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். ராமசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, "மனுதாரர் முன்னாள் அமைச்சரின் தந்தை என்பதால் அரசியல் காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் குவாரி நிலத்தை விற்ற நிலையில், அதை வாங்கியவர் சட்டவிரோத குவாரி நடத்தி வந்தார். இது தொடர்பாக மனுதாரர் ஆட்சியரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், "மனுதாரர் நடத்திய குவாரியில் புகளூர் வட்டாட்சியர் ஆய்வு நடத்தி பெரியளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அறிக்கை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, குவாரி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை ராமசாமிக்கு ரூ.15.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சரான மனுதாரரின் மகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடைபெறாமல் இருந்தால் மனுதாரரின் குவாரியில் நடைபெற்ற குவாரி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்திருக்காது. மனுதாரரின் ஒரு குவாரியில் மட்டும் ரூ.15.55 கோடி அளவில் முறைகேடு நடந்திருந்தால், தமிழகம் முழுவதும் 1700 கல் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் எந்தளவு முறைகேடு நடந்திருக்கும். குவாரி உரிமம், ஒழுங்குபடுத்துதல், கண்காணித்தல் ஆகிய பணிகளுக்காக தனித்துறை உருவாக்க வேண்டும்.
குவாரி திட்டம் இல்லாமல், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் குவாரி நடைபெறக்கூடாது. இதற்காக சட்டம் மற்றும் விதிகளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வர வேண்டும். குவாரிகளை 6 மாதத்துக்கு ஒருமுறை ட்ரோன் தொழில்நுட்ப உதவியுடன் அளவீடு செய்வதற்காக ரூ.25 கோடிக்கு தமிழக கனிமவளத் துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குவாரிகள் அடிக்கடி அளவீடு செய்யப்பட்டால் பெரியளவில் முறைகேடுகளை தடுக்கலாம்.

இந்த வழக்கில் அபராத உத்தரவு பிறப்பிக்கும் முன்பு மனுதாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை. இது இயற்கை நீதிக்கு எதிரானது. இதனால் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு குவாரி உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் நில அளவைத்துறை, கனிம வளத்துறை உதவியுடன் ட்ரோன் தொழில்நுட்ப உதவியுடன் சட்டவிரோதமாக எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்பதை அளவீடு செய்ய வேண்டும். பின்னர் நடவடிக்கை தேவை என்றால், அதற்காக நேர்மையான கோட்டாட்சியர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவர் மனுதாரர், நிலத்தை வாங்கியவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அளித்து விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ட்ரோன் உதவியுடன் எவ்வளவு கற்கள் வெட்டப்பட்டுள்ளது என்பதை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கவும், விசாரணை நடத்தவும் வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் 6 மாதத்துக்கு ஒரு முறை ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அளவீடு செய்து உரிய அதிகாரிகள் சான்று வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications