"சாதிய பாடல்களுக்கு நோ, கண்ணியமான உடைதான்" கரகாட்டத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய ஐகோர்ட்!
மதுரை: கோயில் திருவிழாவில் கரகாட்டம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் அனுமதி வேண்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மேலப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலில் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக திருவிழா நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தில் விசாரணை
இந்த நிகழ்ச்சியில் இறுதியாக வரும் 8ம் தேதி இரவு அன்று கரகாட்டம் நடத்த அனுமதியும், கரகாட்ட நிகழ்ச்சிக்கு காவல்துறை பாதுகாப்பும் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.

கரகாட்டத்திற்கு அனுமதி
இதனைத் தொடர்ந்து கரகாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதில் கரகாட்டம் என்றாலே குத்துப் பாட்டு, குறைந்த ஆடை அணிந்து ஆடல் பாடல், இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், கரகாட்டத்தின் போது கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இரட்டை அர்த்தப் பாடல் கூடாது
அதுமட்டுமல்லாமல் கரகாட்ட நிகழ்ச்சியில் இரட்டை அர்த்த வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது என்றும், கரகாட்டம் நிகழ்ச்சியை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சாதி, சமூகம் போன்ற அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக் கூடாது எனவும், அரசியல் கட்சி, மதம், சமூக, சாதியை குறிப்பிட்டு பாடல்களோ, நடனமோ இடம்பெறக் கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை
மேலும் கரகாட்ட நிகழ்ச்சியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், அதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்களே பொறுப்பு என்றும், நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறினால் நிகழ்ச்சியை நிறுத்த, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அநாகரீகமான வார்த்தைகள் கொண்ட பாடல்களையும் பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications