மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இப்படியுமா இருக்கு.. கேரளா மாணவர் தொடர்ந்த வழக்கில் திருப்பம்
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககத்தின் மூலம் எம்.ஏ. கிரிமினாலஜி பட்டப்படிப்பில் 2016-ம் ஆண்டு படித்த, கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் எழுதியிருந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், மதுரை பேராசிரியர்கள் இல்லாமல் கிரிமினாலஜி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்தது எப்படி என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் பதில் அளிக்க உத்தரவிட்டிருக்கிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் தாலுகா நெரியமங்கலத்தை சேர்ந்த 55 வயதான ஜான்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கூறுகையில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககத்தின் மூலம் எம்.ஏ. கிரிமினாலஜி பட்டப்படிப்பில் 2016-ம் ஆண்டில் சேர்ந்தேன். முறையாக தேர்வு எழுதி இருக்கிறேன். ஆனால் மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு 420 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இதனால் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தேன். முறையான பதில் இல்லை.

துறையே இல்லை
அதன் பின்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எனது தேர்வு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்ததற்கும் பதில் அளிக்கவில்லை. யு.ஜி.சி.க்கும் மனு அனுப்பினேன். பின்னர் விசாரித்ததில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அஞ்சல் வழிக்கல்வி இயக்ககத்தில் கிரிமினாலஜி துறை என்ற ஒன்றே கிடையாது. அதற்கான பேராசிரியர்களும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் கிடையாது. கிரிமினாலஜி படிப்புக்கான எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது என்பதை நான் தெரிந்து கொண்டேன். மேலும் இதழியல் துறை பேராசிரியர்கள் மூலமாக கிரிமினாலஜி துறையில் படிப்பவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டதும் எனக்கு தெரிய வந்தது.
விடைத்தாள் திருத்தம்
இதனால் என்னை போன்ற ஏராளமான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே எனது விடைத்தாளை கிரிமினாலஜி துறையில் நிபுணத்துவம் பெற்ற வேறொரு பல்கலைக்கழக குழுவினரை கொண்டு மீண்டும் திருத்துவதற்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் ஜான்சன் கூறியிருந்தார்.
கிரிமினாலஜி துறையே இல்லை
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில்,ஆஜரான கே.பி.நாராயணகுமார் வாதிடுகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பாரம்பரியமிக்கது. இங்கு கிரிமினாலஜி துறையே இல்லாமல், அதில் படித்த மாணவர்களுக்கு தோராயமாக மதிப்பெண்களை வழங்கி இருப்பதன் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தகுதியான மாணவர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகம் தோல்வியடைந்து உள்ளது என வாதாடினார். விசாரணை முடிவில், மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர், தேர்வாணையர்கள் பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சரவணன் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications