மணி அடிக்கவில்லை.. இளையராஜா மட்டும் மூலஸ்தானத்தில்! மதுரை மீனாட்சி கோவிலில் பெண் எஸ்.ஐ. செய்தது என்ன
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், இசையமைப்பாளர் இளையராஜா திடீரென சென்றிருக்கிறார்.. ஆனால், வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே மூலஸ்தானத்திற்கு பெண் எஸஐ ஒருவர், சென்று சென்றாராம்.. இதுதான் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. முதல் பூஜைக்கான மணி ஒலிக்கும் முன்பே இளையராஜாவை மூலஸ்தானத்திற்கு அழைத்துச் சென்றது குறித்து பக்தர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. என்ன நடந்தது?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். நடை திறந்ததும் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று, சித்தி விநாயகர் சன்னிதி அருகே வரிசையில் காத்திருப்பார்கள். அதிகாலை 5 மணிக்கு முதல் பூஜைக்கான மணி ஒலித்த பிறகே பக்தர்கள் மூலஸ்தானத்திற்கு சென்று அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
இதற்கு பிறகுதான், திருவனந்தல் பூஜை நடைபெறும்... இந்த நடைமுறை பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்பெஷல், திருவனந்தல் பூஜையை காண்பதற்காகவே சில பக்தர்கள் தனியாக குழுவாக அமைந்து, தினமும் அதிகாலையில் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்..
இந்த நிலையில், நேற்று அதிகாலை இசையமைப்பாளர் இளையராஜா மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தார்.. திருவண்ணாமலை கோயிலுக்கு முன்பிருந்தே, பண்ணைபுரத்துக்காரரின் மனசுக்கு இந்த மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் நெருக்கமானது.. அந்தவகையில் இப்போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்..
இசையமைப்பாளர் இளையராஜா
அவருடன் பாஜக கலாசாரப் பிரிவு மாநில செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். அப்போது கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.ஐ. ஒருவர் இளையராஜா உள்ளிட்டோரை கோவிலுக்குள் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதில், வழக்கமாக பக்தர்கள் மூலஸ்தானத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் நேரத்திற்கு முன்பாகவே இளையராஜாவை பெண் எஸ்ஐ. மூலஸ்தானத்திற்கு அழைத்து சென்றதாக புகார் எழுந்துள்ளது. அதாவது முதல் பூஜைக்கான மணி இன்னும் ஒலிக்காத நிலையில், அவர் மூலஸ்தானம் அருகே அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மணி அடிக்கவேயில்லை
அங்கு இளையராஜா சுமார் 5 நிமிடங்கள் காத்திருந்ததாக தெரிகிறது. பிறகு அதிகாலை 5 மணிக்கு முதல் பூஜைக்கான மணி ஒலித்துள்ளது. அதன் பிறகு இளையராஜா மீனாட்சி அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார்..
மணி ஒலித்த பிறகே பக்தர்கள் மூலஸ்தானத்திற்கு அனுமதிக்கப்படும் நிலையில், இளையராஜாவை அதற்கு முன்பாகவே மூலஸ்தானத்திற்கு அழைத்து சென்றது ஏன் என்ற கேள்விதான், தற்போது எழுந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வந்திருந்த சில பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தார்களாம். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக பக்தர்கள் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.
யார் அந்த மதுரை பெண் எஸ்ஐ
வழக்கமான தரிசன நடைமுறைக்கு மாறாக இளையராஜாவை முன்கூட்டியே மூலஸ்தானத்திற்கு அழைத்துச் செல்ல பெண் எஸ்.ஐ.,க்கு அனுமதி வழங்கப்பட்டதா, அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இப்படி அழைத்து செல்லப்பட்டாரா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்த துவங்கியிருக்கிறார்கள்.
இந்த திடீர் புகார் தொடர்பாக கோவில் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தரப்பில் ஏதாவது விளக்கம் தருவார்களா? என்றெல்லாம் அதிக எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
