அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய மதுரை ஹைகோர்டின் முக்கிய உத்தரவு.. காவலர்களுக்கு குட்நியூஸ்
மதுரை: அரசு ஊழியர் பணியின்போது மாற்றுத்திறனாளியான பிறகு அவர் வகித்த பதவிக்கு ஏற்றவராக இல்லாவிட்டால், அதே ஊதிய அளவு மற்றும் சேவை சலுகைகளுடன் வேறு ஏதேனும் பதவிக்கு மாற்றப்பட வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவு சீருடை பணியாளர்களுக்கும் (காவலர்கள்) பொருந்தும், பணியின்போது நடந்த விபத்தில் சிக்கி பார்வையை இழந்த காவலரை வேலையில் இருந்து விடுவித்ததை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் காவலர் கணேசன் கூறுகையில், "சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு 13-வது சிறப்பு காவல் படையில் (பட்டாலியன்) காவலராக கடந்த 1.4.2010 அன்று பணியில் சேர்ந்தேன். 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் பணியின்போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தல் சிக்கிய எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் எனக்கு கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. இதனால் காவலராக என்னுடைய வழக்கமான பணிகளில் ஈடுபட முடியவில்லை. பின்னர் எனக்கு இலகுவான பணிகள் வழங்கப்பட்டிருந்தது-

இந்தநிலையில் எனக்கு நாயக் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது. நான் தற்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பணியாற்றுகிறேன். சமீபத்தில் எனது கண்களை பரிசோத்தபோது, 100 சதவீதம் பார்வை இழப்பு உள்ளது என டாக்டர்கள் சான்றிதழ் வழங்கியிருந்தார். இதனால் என்னை காவல்துறையில் பணியாற்ற தகுதியை இழந்ததாக கருதி, பணியில் இருந்து விடுவித்தும், அரசு குடியிருப்பை காலி செய்யும்படியும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் கருணாநிதி , மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி, மனுதாரர் பணியில் இருக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. அவரை ஒருபோதும் பணியிலிருந்து விடுவித்தது ஏற்புடையதல்ல என்று கூறினார். அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் சீருடை பணியாளர் என்பதால் காவல் பணியை தவிர மாற்றுப்பணி வழங்க இயலாது. எனவே மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின்கீழ் அவர் உரிமை கோர இயலாது என்று கூறினார்.
விசாரணை முடிவில், மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, தமிழகத்தில் அரசு ஊழியர் பணியின்போது மாற்றுத்திறனாளியான பிறகு அவர் வகித்த பதவிக்கு ஏற்றவராக இல்லாவிட்டால், அதே ஊதிய அளவு மற்றும் சேவை சலுகைகளுடன் வேறு ஏதேனும் பதவிக்கு மாற்றப்பட வேண்டும். இந்த நடைமுறை சீருடை பணியாளர்களுக்கும் பொருந்தும். எனவே மனுதாரரை பணியில் இருந்து விடுவித்த காவல்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் அவரை பணியில் அமர்த்த வேண்டும். ஊதிய பாதுகாப்புடன் கூடிய இலகுவான பணியை 12 வாரத்தில் வழங்க வேண்டும்.. இவ்வாறு நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications