மதுரை ஜல்லிக்கட்டு.. மல்லுகட்ட தயாராகும் காளை(யர்)கள்.. ஆயிரக்கணக்கில் ஆன்லைன் விண்ணப்பம்! முழு விவரம்
மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி பங்கு பெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்குபெற அதிகமான காளை உரிமையாளர்கள் ஆன்லைன் பதிவு செய்துள்ளனர். மற்ற ஊர்களிலும் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ஆன்லைன் பதிவு குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் முதல் நாள் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் நடத்தப்படுகிறது.

அவனியாபுரம் பகுதியில் ஜனவரி 14-ஆம் தேதியும்,15ஆம் தேதி பாலமேடு பகுதியிலும்,பதினாறாம் தேதி அலங்காநல்லூர் பகுதியில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள்.
மதுரை ஜல்லிக்கட்டு:
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மாடுபிடி வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது.
ஆன்லைன் முன்பதிவு:
இதை அடுத்து அவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் பதிவு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறக் கூடிய ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஆன்லைன் பதிவு நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
முன்பதிவு நிறைவு:
ஜல்லிக்கட்டு போட்டியிலே பங்கு பெறக் கூடிய ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவத் தகுதி சான்றிதழ் பெற்றவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்ற ஆன்லைன் பதிவு 3 பகுதிகளிலும் நடைபெறக் கூடிய ஜல்லிக்கட்டுக்கு பதிவு செய்தவருடைய விபரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றுள்ளது.

12,000 காளைகள்:
அதன்படி, 4ஆம் தேதி நடைபெறக்கூடிய அவனியாபுரத்தில் - 2026 ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, 15ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டுக்கு - 4820 ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கு பெறக்கூடிய உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 5786 ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5,000 வீரர்கள்:
அதேபோன்று மாடுபிடி வீரர்கள் அதிகபட்சமாக பாலமேட்டில் களம் காணுவதற்காக பதிவு செய்திருக்கிறார்கள். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு - 1735 மாடுபிடி வீரர்களும், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு - 1914 மாடுபிடி வீரர்களும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு - 1698 மாடுபிடி வீரர்கள் என மொத்தம் 5347 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள். அதன்படி தை மாதம் மதுரையில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிக்கு 12,632 ஜல்லிக்கட்டு காளைகளும், 5347 மாடு பிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியிலே பங்கு பெறுவதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ பரிசோதனை:
இவர்கள் ஆன்லைன் பதிவு சான்றிதழை காண்பிக்கும் போது டோக்கன் வழங்கப்படும். அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனை, எடை சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்குப் பிறகு மாடு பிடி வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு காளைகளும் களமிறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications