சென்னையை போல.. மதுரையும் மாறிவிடக்கூடாது! சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து நீதிபதிகள் எச்சரிக்கை
மதுரை: மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், சென்னை போல மதுரை மாறிவிடக்கூடாது என, சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. இருப்பினும் புறநகர் பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாததால் மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீ தான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.
டிச.4ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை சென்னை முழுவதும் செல்போன் இணைப்புகள் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. எனவே மீட்பு பணிகளில் கடுமையான தாமதம் ஏற்பட்டது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக செல்போன் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில், சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், சென்னையை பற்றி குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, சென்னை போல மதுரை மாறிவிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
அதாவது மதுரை மாநகராட்சி பகுதியான விளாங்குடியில் சட்ட விரோதமாக இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்ட விரோதமாக இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த டைட்டஸ் மதன் குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 5 வருடங்களாக ஆகியும் மதுரை மாநகராட்சி தரப்பில் தற்போது வரை பதில் மனு தாக்கல் செய்யாததால் மதுரை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே இன்றைய வழக்கு விசாரணையில் ஆணையாளர் மதுபாலன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அதில், "சட்டவிரோத அனுமதி இல்லாத கட்டுமான பணிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு, "மதுரையின் பல்வேறு பகுதிகளில் அனுமதியற்ற கட்டுமானங்கள் கட்டப்படுவதை அதிகாரிகள் ஆய்வு செய்வதே இல்லை. மதுரை மாநகரம் அனுமதியில்லாத கட்டிடங்களின் அபாயம் மிகுந்த காடாக மாறி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே பெங்களூர், சென்னை நகரங்கள் இதுபோன்ற சட்டவிரோத கட்டுமானங்களால் பாழாய் போய்விட்டது. அந்த வரிசையில் மதுரையும் மாறி வருவது வேதனை அளிக்கிறது. தற்போதைய சென்னையின் நிலைமையை போல் மதுரையின் நிலைமையும் மாறிவிடக்கூடாது.
அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்குப்பதிந்து சட்ட நடவடிக்கை எடுங்கள். அப்போதுதான் ஏழை மக்களையும், உரிய விதிகளை பின்பற்றுவோரையும் பாதுகாக்க முடியும். சட்டவிரோத கட்டுமான விவகாரத்தில் மாநகராட்சியுடன், காவல்துறை இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்டறியப்பட்டால் அதனை உடனடியாக இடித்து அகற்றுங்கள்.
வெறும் அபராதம் விதிப்பதோடு அதிகாரிகள் விட்டுவிடக்கூடாது. மேலும் அனுமதியில்லாமல் கட்டுமான பணிகளை தொடர்ந்தால் கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். அனுமதியற்ற கட்டுமானங்களால் நிம்மதியற்ற வாழ்க்கையை மக்கள் வாழ நேரிடுகிறது. இதையெல்லாம் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம். நீதிமன்றம் தலையிடாமல் இருக்க முடியாது. மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் தினந்தோறும் ஆய்வு செய்து அனுமதியற்ற கட்டுமானங்களை கண்டறிந்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தாமதமின்றி எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை ஊரக மற்றும் நகராட்சி ஆணையரக அதிகாரிகள் சுற்றறிக்கையாக அனைத்து நகர்ப்புற அமைப்புகளுக்கும் அனுப்பி, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னையை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பேசியிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications