ஓ.பி.எஸ். மகனுக்கு பரிவட்டம்; கையில் ஈட்டி; புதுசா தினுசா; பின்னணி என்ன?
மதுரை: மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி.க்கு அளிக்கப்பட்ட வரவேற்பு ஒன்று முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே பேசு பொருளாக உள்ளது.
பொதுவாக திருமண விழா உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வி.ஐ.பி.களுக்கு பொன்னாடை போர்த்தியோ அல்லது புத்தகங்கள் வழங்கியோ தான் வரவேற்பது வழக்கம்.
ஆனால் மதுரையில் அதிமுக முக்கியப் பிரமுகர் ஒருவர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள சென்ற ஓ.பி.எஸ். மகனுக்கு கள்ளர் நாடு தன்னார்வலர்கள் அமைப்பினர் சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக பிரமுகர்
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணை தலைவரும், தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகத் தலைவருமான அதிமுக முக்கிய பிரமுகர் சோலைராஜா இல்ல திருமண விழா 2 நாட்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி.க்கு முக்குலத்தோர் சமுதாயத்தின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரிவட்டம்
கள்ளர் நாடு தன்னார்வலர்கள் அமைப்பினர் சார்பில் ஓ.பி.எஸ். மகனுக்கு தலையில் பரிவட்டம் கட்டி கையில் ஈட்டி கம்பை கொடுத்து மிடுக்குடன் மணவிழா மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இதனால் மிகுந்த உற்சாகமடைந்த ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி. கள்ளர் நாடு தன்னார்வலர்கள் அமைப்பின் செயல்பாடுகளை ஆர்வமுடன் கேட்டறிந்ததுடன் அந்த அமைப்பின் மூலம் தனக்கான ஆதரவு வட்டத்தை சமுதாய ரீதியில் பெருக்கிக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமுதாய பலம்
சசிகலா விவகாரத்தால் முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறப்படும் நிலையில் மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்வு பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கியதாக தெரிகிறது. அதாவது எப்போதுமே ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள் பக்க பலமாக நிற்கும் என்பதை இந்த பாரம்பரிய முறையிலான வரவேற்பு வைபவம் எடுத்துக்காட்டுகிறது

தென் மாவட்டங்கள்
தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளர் நாடு தன்னார்வலர்கள் அமைப்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் இந்த அமைப்பினரின் வாக்கு வங்கியை முழுவதுமாக அறுவடை செய்ய பல அரசியல் கட்சிகளிலிருந்து இவர்களை அணுகுவது வழக்கமான ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications