“விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவார் என்றால் தவெக உடன் கூட்டணி”.. கிருஷ்ணசாமி பரபர!
மதுரை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தவெக தலைவர் விஜய் அதனை முன்னெடுப்பார் என்றால் அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "இமானுவேல் சேகரன் நினைவஞ்சலிக்கு அரசு பேருந்துகள் வாடகைக்கு எடுத்து வரப்படுகின்றன. அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதில் ஊழல் நடைபெறுகிறது. வாடகை மூன்று மடங்கு அதிகரித்ததோடு அதற்கு ரசீதுகள் கொடுக்கவில்லை. 10,000 ரூபாய் வாடகை வசூலிக்க வேண்டிய இடத்தில் 30,000 ரூபாய் வாடகை வசூலிக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
தமிழகம் முழுதும் இருந்து 2,000 அரசு பேருந்துகள் வாடகைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 5 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வழக்கு தொடுப்போம். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் டீக்கடைகள் கூட இயங்க காவல்துறை அனுமதிக்கவில்லை, இது போன்ற விழாக்களில் தமிழக அரசு மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
விஜய் உடன் கூட்டணி?
புதிய தமிழகம் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் உண்மையான சமூக நீதி கிடைக்கும். தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும். எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறதோ அந்த கூட்டணிக்கு சொல்வோம். திராவிட கட்சிகளை தாண்டி விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தந்தால் அவருடன் கூட்டணி சேர்வது குறித்து பரிசீலிப்போம்.
ஜனவரி 7 ஆம் மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு பிறகு எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். தமிழகத்தில் திராவிடம் நிலைத்து நிற்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. கள நிலவரங்களுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும். விஜய் அதனை முன்னெடுப்பார் என்றால் கூட்டணி குறித்து மாநாட்டிற்கு பின்பு முடிவெடுக்கப்படும்.
மதுரை விமான நிலையம் பெயர்
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியது ஏற்புடையது அல்ல. 1998 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் பொது இடங்களில் சாதி பெயர்கள் வைக்க கூடாது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள சாதி தலைவர்களின் சிலைகள் எடுக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும். விமான நிலையங்களுக்கு சாதி தலைவர்கள் பெயர் வைக்கும் கலாச்சாரம் மீண்டும் கீழே செல்ல வைக்கும். இது பிளவுபடுத்தும். வாக்கு அரசியலுக்காக பேசக் கூடாது.
கோவில் முறைகேடு
கோவில்களின் உண்டியல்களில் காணிக்கையாக கிடைக்கும் தங்கம், வைரத்தை இந்து சமய அறநிலையத்துறை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றியுள்ளது. பல கோவில்களில் பல்வேறு வகையான ஊழல்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கட்டுமானப் பணியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. அந்த கோயிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அறங்காவலராக உள்ளனர். முடிகாணிக்கை செலுத்தியதில் மட்டும் ரூ. 7 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது." எனத் தெரிவித்துள்ளார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications