மெரினா சம்பவத்தை மறைக்க.. ரயில் விபத்தில் நாடகமாடும் திமுக.. விளாசிய எல்.முருகன்
மதுரை: மெரினாவில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தை மறைப்பதற்காக ரயில் விபத்தில் திமுக நாடகமாடி வருகிறது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சி மிகவும் வேதனையானது என்றும், சொத்து வரி, பத்திரப் பதிவு வரி, மின் கட்டண உயர்வு என வரிக்கு மேல் வரி, மூலைக்கு மூலை டாஸ்மாக் என பொதுமக்களுக்கு வேதனையான ஆட்சியை திமுக அளித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி வரை இந்த சேர்க்கைப் பணி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, எல்.முருகன் கூறியதாவது: தமிழ்நாட்டில் திட்டமிட்டே மத்திய அரசுக்கு எதிரான கருத்தை ரயில் விபத்தில் தெரிவித்து வருகின்றனர். திமுக, கூட்டணி கட்சியினர் திட்டமிட்டு இதனைச் செய்து வருகின்றனர்.

மெரினாவில் 5 பேர் உயிரிழந்தார்கள். அதுகுறித்து கூட்டணி கட்சியினர் பேசினார்களா. மெரினா சம்பவத்தை மறைக்க திமுக ரயில் விபத்தில் நாடகமாடி வருகின்றனர். ரயில் விபத்து குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால், ஒட்டுமொத்த ரயில்வேயும் வேலை செய்யவில்லை என திமுக இந்தியா கூட்டணி மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். மெரினா நிகள்ச்சியின்போது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
மெரினாவில் ரயில், பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. தண்ணீர், ஆம்புலன்ஸ் இல்லாமல் 5 பேர் உயிரிழந்தனர். இதற்காக தனி விசாரணையை நடத்த தேவையில்லை. திமுகவின் மூன்றரை ஆண்டுகால ஆட்சி இது முழுக்க முழுக்க வேதனையான ஆட்சி. தமிழர்கள் ஒவ்வொருவரும் வேதனைப்படும் ஆட்சியாக இது அமைந்துள்ளது. மின் கட்டணம் பல மடங்காக உயர்ந்துள்ளது. 600 ரூபாய் கட்டணம் வந்த வீட்டில் இப்போது 6 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வருகிறது.
சொத்து வரி உயர்வு, பத்திரக் கட்டண உயர்வு, பத்திரப் பதிவு வரி உயர்வு, அரசு வழிகாட்டு மதிப்பு வரி உயர்வு என வரி மேல் வரி உயர்வு போடப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு எங்கு பார்த்தாலும் மதுக் கடைகளை திறந்துவைத்துள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல், நகரப் பகுதிகளில் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளை மார்டனைஸ் செய்து மனமகிழ் மன்றங்களாக திமுகவினர் நடத்தி வருகின்றனர். அதோபோல, ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்திலும் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நகரங்களில் உள்ள பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு இ-வாகனங்களை கொண்டு வர மத்திய அரசாங்கம் பலமுறை சொல்லிவிட்டனர். அதற்கான முழு செலவையும் மத்திய அரசு அளிக்கிறது. ஆனால், அதை கூட திமுகவினர் நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. இவ்வாறு திமுக அரசு மக்களின் மேல் வரி மேல் வரி, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, டாஸ்மாக் என ஒரு சேர தமிழக மக்கள் மத்தியில் வேதனைமிக்க ஆட்சியாக இது உள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணி பற்றியெல்லாம் சரியான நேரம் பார்த்து தேசிய தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்தான் கூறுவார்கள். பாஜக உறுப்பினர் சேர்க்கை கூட்டங்களை தொடர்ந்து ஆன்லைனில் அண்ணாமலை நடத்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து எங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
அண்ணாமலை வெளிநாட்டில் படிப்பில் இருந்தாலும் கூட தமிழக அரசியலில், குறிப்பாக பாஜக உறுப்பினர் சேர்க்கை செயல்பாடுகளை தினந்தோறும் கவனித்து வருகிறார். வாரம் இருமுறை நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசி வருவதோடு, அவர்களுடைய கருத்து மற்றும் ஆலோசனைத் தெரிவித்து வருகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications