விடிஞ்சா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. திடீர் போராட்டத்தில் காளை உரிமையாளர்கள்! டோக்கன் பஞ்சாயத்து!
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு டோக்கன் வழங்குவதில் முன்னுரிமை தர கோரி, 200க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் முதல் நாள் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் நடத்தப்படுகிறது. அவனியாபுரம் பகுதியில் ஜனவரி 14-ஆம் தேதியும்,15ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் பகுதியில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள்.
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடைபெறக் கூடிய ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஆன்லைன் பதிவு கடந்த 7ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி நிறைவு பெற்றது.
அதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 5786 ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 1698 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் ஆன்லைன் பதிவு சான்றிதழை காண்பிக்கும் போது டோக்கன் வழங்கப்படும். அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனை, எடை சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்குப் பிறகு மாடு பிடி வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு காளைகளும் களமிறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். காலை 7:00 மணி முதல் 12 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டு ஒவ்வொரு சுற்றிலும் பிடிபடாத காளைகளை உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் மோதிரம் தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளை வழங்குகிறார். மாலையில் நடக்கும் பரிசளிப்பு விழாவில் அதிக காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் நன்கு விளையாடிய காளைகளுக்கும் கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்றாலே அமைச்சர்கள், முன்னால் அமைச்சர்கள், தமிழகத்தில் பிரபலங்கள் உள்ளிட்டோர்களது மாடுகள் அவிழ்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பார்வையிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு டோக்கன் வழங்குவதில் முன்னுரிமை தர கோரி, 200க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருவதாகவும், மாட்டின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு அனுமதி தற்போது வரை கிடைக்காததால் பரிசுப் பொருட்கள் மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டிருக்கக் கூடிய இடத்தை சுற்றி நூற்றுக்கணக்கான உள்ளூர் மாட்டு உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கள் காளைகளுக்கு அனுமதி கிடைக்கும் வரை வாடிவாசல் முன்பு அமர்ந்து போராடுவதாக அறிவித்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற 5700 ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் வெளியூர்களை சேர்ந்த காளை உரிமையாளர்களுக்கு அதிக அளவில் டோக்கன் வழங்கப்படுவதாகவும், அலங்காநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட காளைகள் இருக்கும் நிலையில் தொடர்ந்து அவை புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் அதிக அளவில் டோக்கன்களை பெற்றுக் கொள்வதால் உள்ளூர் மாடுகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் தங்களுக்கு டோக்கன் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications