பஞ்சாயத்து தலைவர் தேர்தல்.. காரைக்குடி எம்.எல்.ஏ. மனைவி வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் காரைக்குடி எம்.எல்.ஏ. மனைவி வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவி தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிமன்றத்தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் நானும், பிரியதர்ஷினி என்பவரும் போட்டியிட்டோம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் 62 வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.. சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது..

சிறிது நேரத்தில் என்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும், அவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரியதர்ஷினியின் வெற்றி செல்லும் என உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பிரியதர்ஷினி சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்பட்டது. இதில் நான் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே தேவியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் கீழ் நீதிமன்றம் முறையான விசாரணை நடத்தி, பிரியதர்ஷினி வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது என வாதாடினார். இதனை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தேவியின் மறு பரிசீலனை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
