மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.. பிரம்மாண்டமாக நிற்கும் 3 கட்டிடங்கள்.. எவ்வளவு பணிகள் முடிவடைந்துள்ளன?
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வரும் சூழலில், முதற்கட்ட பணிகள் இன்னும் 7 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான பணிகள் குறித்து பார்க்கலாம்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் அடிக்கல் நாட்டியதோடு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவே இல்லை. மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்க வேண்டும் என்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

4 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் செங்கலுடன் பிரச்சாரம் செய்ய தொடங்கினார்கள். இந்த நிலையில் மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, திமுக மீது சரமாரியான விமர்சனங்களை முன் வைத்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், மதுரை வந்த அமித் ஷா அங்கு கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் நிலையை பார்த்தாரா? என்று பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் கேள்விக்கு பின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் 3டி மாடல் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த மாதிரி வீடியோவில் கல்வி வளாகம், வெளி நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகள், மாணவர்களுக்கு விடுதிகள், அத்தியாவசிய மருத்துவ சேவை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் மாணவர்விடுதி, குடியிருப்புகள், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் அமைக்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான தளம், பிரம்மாண்ட கார் பார்க்கிங் வசதிகள், நுழைவு வாயில் ஆகியவை உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வந்து ஏற்படும் வளர்ச்சியும் கூறப்பட்டிருந்தது. இதன் முதற்கட்ட பணிகள் 2026 ஜனவரியில் முடிவுக்கு வரும் என்றும், 2ஆம் கட்ட பணிகள் 2027 பிப்ரவரியில் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எந்த அளவிற்கு முடிவடைந்துள்ள என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் 3 பிரம்மாண்ட கட்டிடங்கள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. அதேபோல் அந்த கட்டிடங்களுக்கு முன் சிறிய கட்டிடங்களும் விரைவாக கட்டப்பட்டு வருகின்றன. மருத்துவக் கல்லூரி வளாகம், மருத்துவ சிகிச்சைக்கான வளாகம், விடுதிகள் மற்றும் நிர்வாக கட்டிடம் ஆகியவை இந்த 3 கட்டிடங்களில் இயங்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மதுரையின் புதிய அடையாளமாக மாறும் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications